திமுக-அதிமுக கைகோர்த்ததால் இடைத்தேர்தல் ரத்து: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
திமுகவும் அதிமுகவும் கைகோர்த்து திருவாரூர் இடைத்தேர்தல் ரத்துக்கு காரணமாகியுள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு, கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். இது ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகும்.
இந்த ஜனநாயக விரோத செயலை ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக செய்ய முயன்றபோதே கண்டித்திருக்க வேண்டிய திமுகவும் இதற்கு துணைபோனது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திமுகவுக்கும் தோல்வி பயம் இருந்ததையே இது காட்டியது.
திருவாரூரில் அமமுக வெற்றி பெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த விஷயத்தில் அதிமுகவும், தி.மு.க.வும் கைகோர்த்துள்ளன. இதற்கு சரியான தண்டனையை எப்போது தேர்தல் வந்தாலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வழங்க திருவாரூர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்”
இவ்வாறு டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்டில் பதிவு செய்துள்ளார்.