திமுக எம்.பிக்கள் இந்தி கற்கலாம், சாமானியர்கள் கற்க கூடாதா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை நுழையவிட மாட்டோம் என திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்திருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கருணாநிதிக்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். எந்த மொழியை கற்க வேண்டும் என முடிவெடுப்பது மாணவர்கள்தான் என்றும், கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்கள் அதில் தலையிட உரிமையில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பொன்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து இன்று கூறியபோது, “‘தமிழகத்தில் 10 நவோதயா பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தி மொழியை அனுமதிக்காததால் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் மொழி என்ன வளர்ச்சி கண்டுள்ளது. அதனால், மொழி பிரச்னையை வைத்து கொண்டு கருணாநிதி, தமிழக மக்களுக்கு துரோகம் செய்கிறார்.
50 வருஷத்திற்கு முன் நீங்கள் சொன்னதை கடைபிடித்து இருக்கிறீர்களா?, தி.மு.க. கடைபிடித்து இருக்கிறதா?. எனக்கு தெரியும், நாங்கள் இந்தி படிக்கக்கூடிய இடத்தில், டெல்லியில் நான் இந்தி படிக்கக்கூடிய அதே ஆசிரியரிடம் தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் அல்ல இருவர் அல்ல பலர் படித்ததை நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.
இவருக்கு இந்தி தெரியும் அதனால் அமைச்சர் பொறுப்பு கொடுக்கலாம் என்று கலைஞரே சொல்லி இருக்கிறார். ஆக, கலைஞரே அமைச்சர் பொறுப்பு எடுப்பதற்கு இதுதான் தகுதி என்று சொன்னபிறகு, ஏழை வீட்டு மாணவர் அதை படிக்கக்கூடாது என்று கலைஞர் எப்படி சொல்ல உரிமை பெற்றவராக இருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.