திருப்பதியில் 23–ந் தேதி முதல் குருவந்தன மகோற்சவம்
திருப்பதியில் இம்மாதம் 19-ந் தேதி குருபூர்ணிமாவை முன்னிட்டு சங்கீத மகா குருக்களுக்கு வந்தனம் செய்யும் வகையில் வரும் 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் குருவத்தன மகோற்சவம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த 3 நாட்களும் ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பஜனைக் குழுக்கள் இதில் பங்கு கொண்டு காலை 5 மணி முதல் 7.30 மணி வரை சுப்ரபாதம், தியானம், பஜனை பாடல்கள், பாடி திருவீதி சங்கீர்த்தனம் செய்ய உள்ளனர்.
காலை 9 மணிமுதல் 12 மணி வரை வேதபண்டிதர்களின் ஆன்மிக நிகழ்ச்சிகள், உரையாடல்கள், மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நாமசங்கீர்த்தனம், குருவந் தன கீர்த்தனைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.33 கோடி வசூலானது.
ஏழுமலையானை தரிசித்தபின் ஸ்ரீவாரி உண்டியலில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முதல் புதன்கிழமை மாலை வரை பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.33 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஜூலை 6-ஆம் தேதி முழுவதும் 66,155 பேர் தரிசனம் செய்தனர். தர்ம தரிசனத்துக்கு 10 மணி நேரமும், நடைபாதை பக்தர்கள் 6 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருமலை ஏழுமலையானின் அறக்கட்டளைக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது. திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.
ராஜஸ்தான், டீட்வாலாவில் உள்ள ஜலாரிய மடத்தின் ஸ்ரீமன் ஷ்யாம் சாரி சுவாமிகள் அங்குள்ள அலென் கல்வி நிறுவனம் சார்பில் ஏழுமலையானின் அறக்கட்டளைக்கு ரூ.25 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.
இதற்கான வரைவோலையை அவர் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்தியிடம் வழங்கினார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்கள் வழங்கினர்.