திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி உற்சவம் தொடங்குகிறது. அன்று காலை 7 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு மாடவீதிகளில் வீதி உலா நடக்கிறது. பின்னர் வசந்த மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு அபிஷேகம், நெய்வேத்தியம் செய்யப்பட்டு கோவிலுக்கு திரும்புகின்றனர். இரண்டாம் நாளான 4-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி தங்க ரதத்தில் எழுந்தருளி காலை 8 மணி முதல் 10 மணி வரை மாடவீதிகளில் உலா நடக்கிறது. பின்னர், வசந்த மண்டபத்தில் அர்ச்சகர்கள் வசந்தோற்சவம் நடத்துகின்றனர்.
கடைசி நாளான 5-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சாமி, சீதாராம லட்சுமணன், ஆஞ்சநேயர், கிருஷ்ணசுவாமி உற்சவமூர்த்திகள், ருக்மணியுடன் வசந்த உற்சவத்தில் பங்கேற்று மாலையில் கோவிலை வலம் வருவார்கள். இதை முன்னிட்டு தினமும் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சுவாமி, தாயார்களுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஆஸ்தானம் நடைபெறும். வசந்த உற்சவத்தை முன்னிட்டு அஷ்டதள பாதபத்மாராதனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல்சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதிபாலங்கர சேவைகள் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை ரத்து செயயப்பட்டுள்ளது.