திருமணத் தடை நீக்கும் முருகப்பெருமானின் 7-வது படை வீடு
முருக கடவுளின் பிற கோவில்களை போலவே மருதமலை செல்லும் கோவிலும் மேற்கு தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது.
திருமணத் தடை நீக்கும் முருகப்பெருமானின் 7-வது படை வீடு
கோவை மாவட்டத்தில் மருதமலை பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சோமையம் பாளையம் ஊராட்சியில் உள்ள ஒரு மலை ஆகும். இது கோவையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகன் கோவில் முருகப்பெருமானின் 7-ம் படை வீடாக கருதப்படுகிறது.
இக்கோவில் மிகவும் பழமையானது ஆகும். திருமுருகன்பூண்டி கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இக்கோவிலை பற்றிய குறிப்புகள் உள்ளன. அது ஏறக்குறைய 1200 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலுக்கு அருகிலேயே பாம்பாட்டி சித்தர் குகைக்கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோவில் முற்காலத்தில் கொங்கு வேட்டுவ கவுண்டர் மன்னர்களின் சொத்தாக விளங்கியது. முருக கடவுளின் பிற கோவில்களை போலவே மருதமலை செல்லும் கோவிலும் மேற்கு தொடர்ச்சியின் விரிவான இந்த மலை உச்சியில் அமைந்துள்ளது.
மருதமலையின் சிறப்பு :
மருதமலையை மருந்து மலை என்று சொல்லும் வகையில் மக்களின் உடற்பிணியும், மனப்பிணியும் நீக்கும் மூலிகைகளும் மரங்களும் உள்ளன. அருமையான காற்றும், அமைதியான சூழலும் மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. தவம் செய்வோர் அருளாளர்கள் இறப்பிலாப் பெருவாழ்வு அடைய காயகல்பம் தேடி இம்மலையில வந்து தங்கினர். காமதேனு என்னும் தெய்வீகப்பசு இம்மலையில பசி நீங்க மேய்ந்து மருத மரத்தின் கீழ் இருந்த நன்னீரைப் பருகியதாக பேரூர் புராணத்தில் கச்சியப்ப முனிவர் கூறியுள்ளார்.
மருதமலையின் இட அமைப்பு :
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் தரை மட்டத்தில் இருந்து 500 அடி உயரத்திலும் கோவையில் இருந்து வடமேற்கு திசையில் 15 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. கோவை மாநகரத்தில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல விமான வசதி மற்றும் ரெயில், பஸ் வசதி ஆகியவை உள்ளன.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கோவை நகருக்கு பஸ் வசதிகள் உள்ளது. கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் மருதமலை அடிவாரம் வரை செல்கின்றன. மருதமலை அடிவாரத்தில் கோவிலுக்கு செல்வதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
வழிபடும் முறை :
மருதமலை கோவிலில் முதலில் ஆதி மூலஸ் தானத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகனை நாம் தரிசனம் செய்ய வேண்டும். பின்னர் பஞ்சமூக விநாயகரை வழிபட்டு விட்டு மூலவர் முருகனை மனமுருகி தரிசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து பட்டீஸ்வரர், மரகத அம்பிகை, வரதராஜ பெருமாள் , மற்றும் நவக்கிரக சன்னதியை வழிபட வேண்டும். மேலும் கோவிலில் பாம்பாட்டி சித்தர் சன்னதி, சப்த கன்னியர் சன்னதியையும் படிக்கட்டில் வீற்றிருக்கும் இடும்பன் சன்னதியையும் வழிபட வேண்டும்.
தல விருட்சம் :
மிகப்பழமையான காலத்தே நம் முன்னோர்கள் வனத்தை இருப்பிடமாக கொண்டு வாழ்ந்து வந்தனர். பின்னர் நாகரீக வளர்ச்சியில் காடு கெடுத்து நாடாக்கப்பட்டபின்பு தெய்வங்களுக்குப் பெருங்கோவில்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு கோவில்கள் அமைக்கப்பட்ட போதிலும் ஆதியில் இருந்த மரத்தினை அழிக்காது அதனை இன்றளவும் சுவாமிக்கு அருகில் தல விருட்சம் (தலமரம்) என்ற பெயரில் வளர்த்து வருகின்றனர். அவ்வகையில் மருதமரமானது இங்கு ஸ்தல விருட்சமாக இருந்து வருகிறது.
பக்தர்களுக்கான வசதிகள் :
மருதாசலமூர்த்தியின் அருள்பெற கடலெனத் திரண்டு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. மலையின் அடிவாரத்திலிருந்து மலைகோவிலுக்கு மனங்கவரும் மலைப்பாதை அமைக்கப்பட்டு சிற்றுந்துகள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இயக்கப்படுகின்றன. மலைச் சாலையிலும், படிக்கட்டுகளின் இருபுறமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் பகலில் மட்டுமின்றி இரவிலும் வந்து செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் 12 அறைகள் கொண்ட மருதம் தங்கும் விடுதி குறைந்த வாடகையில் கோவில் நிர்வாகத்தாரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மலைமீது திருக்கோவில் அமைவிடம் மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் பக்தர்கள் அருந்துவதற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மலைமீது ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
நித்திய பூஜை கட்டளைகள் மற்றும் அர்ச்சனைகள் :
மருதமலையானை ராஜ அலங்காரத்தில் தரிசிக்க கண்கோடி வேண்டும். மருதப்பனுக்கு தங்கள் பெயரில் அபிஷேக பூஜை நடத்த ஒருவர் 20 ஆயிரம் செலுத்தினால் நித்திய பூஜாக் கட்டளை என்னும் திட்டத்தில் அத்தொகையை வங்கியில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டி தொகையைக் கொண்டு, ஆண்டுக்கு ஒரு முறை அவர் விரும்பும் நாளில் சுவாமிக்கு அவர் பெயரில் விசேஷ அபிசேக பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் அளிக்கப்படும். மேலும் ரூ. 2 ஆயிரம் மட்டும் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டால், அவர் பெயரில் கிருத்திகை நாட்களில் சுவாமிக்கு அர்ச்சனை செய்து, ஒரு வருடத்திற்கு பிரசாதம் தபாலில் அனுப்பப்படும். பலர் இத்திட்டங்களில் பங்கேற்று மருதமலையானின் அருள் பெற்று வருகிறார்கள்.
சிறுவாணி தண்ணீர் வசதி :
மருதமலை முருகன் கோவிலில் சுவைமிகு சிறுவாணி குடிநீர் சுமார் 6 லட்சம் ரூபாய் செலவில் மலையடி வாரத்துக்கு கொண்டு வரப்பட்டு கோவில் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் வழங்கபட்ட மோட்டார்கள் மற்றும் குழாய்கள் மூலம் தண்ணீர் மலை மேல் கொண்டு செல்லப்பட்டு உள்ளதால் பக்தர்களுக்கு குடிநீர் தாராளமாக கிடைக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
சித்த வைத்திய சாலை :
பொதுமக்கள் நலனுக் காக மருதமலை கோவில் நிர்வாகம் சார்பில் வடவள்ளியில் சித்த வைத்திய சாலை இயங்கி வருகிறது. இந்த வைத்தி யசாலையில் மருத்துவ சேவை இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் நோய்களில் இருந்து நிவாரணம் பெற்று வருகிறார்கள்.
மருதமலை கோவிலின் கல்வி சேவை :
மருதமலை கோவில் சார் பில் வடவள்ளி கிராமத்தில் 1971-ம் ஆண்டில் ஒரு கீற்று கொட்டகையில் ஆரம்பி க்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி நிரந்தர கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டு தற்போது மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்துள்ளது. மாணவர்களின் நலனுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனேக வகுப்பறைகளும் ஆய்வு கூடங்களும் மற்றும் நூல் நிலையமும் கொண்ட புதிய மேல்தளத்துடன் கூடிய கட்டிடம் கட்டப்பட்டு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் தற்போது 1311 மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். அறிவு கல்வியோடு ஆன்மீகமும் இணைந்து ஒழுக்க கல்வியும் இங்கு கற்று கொடுக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது.
முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் :
மருதமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறி பிறகு குடும்பத்துடன் வந்து நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள். குழந்தை பிறக்க வேண்டி தொட்டில் கட்டி யும், திருமணம் நடக்க வேண்டி சுவாமிக்கு பொட்டு தாலி, வஸ்திரம் வைத்து கல்யாண உற்சவம் நடத்தியும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
16 1/2 அடி உயர தங்கத்தேர் :
மருதமலை முருகன் கோவிலில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தங்கத்தேர் புறப்பாடு நடந்து வருகிறது. சுமார் 16 1/2 அடி உயரத்தில் ரூ.1.08 கோடி மதிப்பில் தங்க ரதம் செய்யப்பட்டு உள்ளது. தங்க ரதத்தில் ஜொலிக்கும் முருகனை தரிசனம் செய்ய கண் கோடி வேண்டும் என்பது போல் பக்தர்கள் மனமுருகி வேண்டி செல்கிறார்கள்.
தங்க ரத புறப்பாடு காணிக்கையாக பக்தர்கள் ரூ.1500-ஐ செலுத்தினால் தங்க ரதத்தை இழுத்து வேண்டுதலை நிறைவேற்றலாம். மேலும் ரூ.25 ஆயிரம் முதலீடாக செலுத்தினால் அந்த தொகையில் கிடைக்கும் வட்டியை கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாளில் தங்கரத புறப்பாடு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமணம் கை கூடும் :
நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் திருமணத் தடை ஏற்படுவோர் இத்திருக்கோவில் சுவாமிக்கு பொட்டுத்தாலி, வஸ்திரம் வைத்து கல்யாண உற்சவம் நடத்தினால் கட்டாயம் விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை இல்லாத தம்பதியினர் 5 வாரம் வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்தால் நிச்சயம் முருகனின் அருள் கிடைக்கும்.
குதிரைக் குளம்படிகள் :
இடும்பனை வணங்கிச் சற்று மேலே சென்றால் குதிரைக்குளம்பு என்னும் சுவடு உள்ளது. அதற்காக எழில்மிகு மண்டபமொன்று அமைக்கப்பட்டுள்ளது. முருக வேள் சூரர்களை வெற்றிகொள்ளப் புறப்படும் போதோ அல்லது திரும்பி வரும் போதோ குதிரைக் குளம்புகள் பதிந்த இடமெனக் கருதப்படுகிறது. உண்டியல் பொருட்களைத் திருடர்கள் களவாடிச் செல்ல அவர்களை முருகப் பெருமான் தேடிச் சென்றபோது ஏற்பட்ட குதிரையின் குளம்படியாகவும் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
வழிபாட்டு முறை :
இத்திருக்கோவிலில் காமிகா ஆகம பிரகாரம், தினசரி பூஜைகள் செய்யப்படுகிறது. காலையில் 6.00 மணிக்கு உஷக்காலம் (விஸ்வரூப தரிசனம்) காலை 9.00 மணிக்கு காலசந்தி, மதியம் 12.00 மணிக்கு உச்சிக்காலம் மாலை 5.00 மணிக்கு சாயரட்சை மற்றும் இரவு 8.30 மணிக்கு அர்த்தஜாமம் (இராகாலம்) ஆகிய பூஜைகள் செய்யப்படுகிறது. மதியம் 1.00 மணி முதல் 2.00 மணிவரை திருக்கோவில் காப்பீடுதல் செய்யப்படுகிறது.
இணைய தளம் :
மருதமலை கோவில் விவரங்களுக்கு தற்போது இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அளிக்கும் முருகனின் சிறப்புமிக்க பிரார்த்தனை தலமான மருதமலை கோவிலின் தல வரலாறு, தல அமைவிடம், தலச்சிறப்பு, பூஜை காலங்கள், தீர்த்தங்கள், கலை, கட்டிட கலை, அருகில் உள்ள கோவில்கள், போக்குவரத்து வசதிகள், உணவகங்கள் , தங்கும் விடுதி மற்றும் பாடல்கள் ஆகியவற்றை அழகிய வண்ணப்படங்களுடன் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் www.maruthamalaimurugantemple.org என்ற இணைய தள முகவரி தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் பக்தர்களும் மின் அஞ்சல் மூலம் பிறந்த நாள், திருமண நாள், அன்புக்குரியவர்களின் நினைவு நாள் விழா நாட்களில் காணிக்கை செலுத்தி அர்ச்சனை, அபிஷேக ஆராதனை செய்ய ஏற்ற வகையில் மின்னஞ்சல் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அன்னதான திட்டம் :
மருதமலை கோவிலில் தினமும் மதியம் 12-15 மணிக்கு கோவிலுக்கு வரும் 150 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளிதோறும் வடை பாயசத்துடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.
அன்னதானம் கடந்த 23-3-2003-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவுக்கு ரூ.3 ஆயிரம் பணத்தை கோவிலில் செலுத்தி அன்னதான திட்டத்தில் கலந்து கொள்ளலாம். அல்லது ரூ.30 ஆயிரம் செலுத்தி முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகை வட்டியை கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாளில் அன்னதானம் செய்து கொள்ளலாம். அன்னதான திட்டத்துக்கு நன்கொடை செலுத்துவதன் மூலம் வருமான வரிக்கு விலக்கும் பெறலாம்.
கோவையில் இருந்து பஸ்சில் செல்ல :
கோவையில் இருந்து மருதமலைக்கு மிக எளிதாக பஸ்சில் சென்று வரலாம். கோவையின் பல பகுதிகளில் இருந்தும் இதற்காக போதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 70, 70டி, 120, எஸ்.12, 92 ஆகிய எண்கள் கொண்ட பஸ்கள் மருதமலைக்கு செல்கின்றன.
உக்கடத்தில் இருந்து 120ஏ, 46 ஆகிய பஸ்கள், டவுன்ஹால் பகுதியில் இருந்து எஸ்13, எஸ் 15, எஸ் 13ஏ ஆகிய பஸ்கள், சிங்காநல்லூரில் இருந்து 1 டி பஸ்சும், ஈச்சனாரியில் இருந்து 67ஏ என்ற பஸ்சும் இயக்கப்படுகிறது.
தொடர்பு கொள்ள…
மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலை பொது மக்கள் 0422-2422490 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம்.