துயர் தீர்க்கும் துளசி!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். அப்படி நோய்நொடி இல்லாமல் வாழ ஆன்மிகத்தோடு அறிவியலையும் எடுத்துச் சொல்லும் நம் இந்து மதத்தின் அறநெறிகளும், இயற்கை சார்ந்த வழிபாடு களும் ஆன்ம பலமும், தேகபலமும் அளிக்கும் பொக்கிஷங்களாகத் திகழ்கின்றன. அத்தகைய வழிபாடுகளில் குறிப்பிடத்தக்கது துளசி வழிபாடு.
பகவானின் சாந்நித்தியம் நிறைந்த துளசிக்கு பிருந்தா என்று மற்றொரு பெயரும் உண்டு. தினமும் துளசி மாடங்களில் தீபம் ஏற்றிவைத்து, மகாவிஷ்ணு மற்றும் துளசிதேவிக்கு உரிய துதிப்பாடல்களையும் ஸ்லோகங்களையும் பாடி வழிபடுவதால், அந்த வீட்டில் தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; மகிழ்ச்சி பெருகும் என்கின்றன ஞானநூல்கள். இதுமட்டுமல்ல, இன்னும்பல மகிமைகள் உண்டு துளசிச்செடிக்கு!
பொதுவாக பல மரங்கள், செடிகள் பகல் நேரத்தில் கரியமில வாயுவை சுவாசித்துக் கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும், இரவு நேரத்தில் அது தலைகீழாக நடக்கும். ஆனால், மகத்துவம் வாய்ந்த துளசி பூமிக்கு 24 மணி நேரமும் ஆக்சிஜனை மட்டுமே தரும் சிறப்பு வாய்ந்தது.
துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பதன் மூலம், அதன் மூலிகைத் தன்மை நிறைந்த நறுமணத்தால், நம் சுவாசம் ஆரோக்கியமாகும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
பச்சை துளசி, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் கலந்த தீர்த்தத்தை குடிக்கும்போது, நம் உடலில் அது ஒரு சிறந்த நச்சு நீக்கியாக செயல்பட்டு உடலுக்கு நன்மை செய்கிறது.
நான்கு துளசி இலைகள், ஒரு ஆப்பிளுக்கு சமம் என்றே சொல்லலாம். ஒருவர் தினமும் துளசிக் கொழுந்துகள் நான்கைச் சாப்பிட்டுவந்தால், அவருக்கு நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும். ஆயுள் கூடும். ஏற்கெனவே இருக்கும் நோயின் வீரியம் மெள்ள மெள்ள குறையும்.
துளசி இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய்க் கட்டிகள் அழியும். அது திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும், புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை எடுத்திருந்தால், அந்த சிகிச்சையின் பக்க விளைவுகளிலிருந்தும் துளசி காக்கும்.
உலகில் 200க்கும் அதிகமான துளசி வகைகள் இருக்கின்றன. உருவ அமைப்பு வேறுபட்டு இருந்தாலும், அவற்றின் பலன்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றன.
பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை, ஓசோன் (O3) வாயுவை வெளியிடுமாம் துளசி. இதனாலேயே நம் முன்னோர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, துளசிச் செடியை வணங்க ஆரம்பித்தனர் போலும்.
துளசிச் செடியை வலம் வருவதால், ஓசோன் வாயு நம் சுவாசத்தின் மூலம் உள்சென்று உறுப்புகளுக்கு புத்துணர்ச்சியும், மூளைக்கு சுறுசுறுப்பையும் தருகிறது. மரங்கள் வளர்க்க முடியாத சூழ்நிலையில், மொட்டைமாடி, வாசல், பால்கனி போன்றவற்றில் துளசிச் செடியை வளர்ப்பதன் மூலம், பரிசுத்தமான பிராண வாயுவைப் பெறலாம்.