துர்காதேவி சரணம்!

துர்காதேவி சரணம்!

உயிர்களின் துக்கங்களைப் போக்குபவளே துர்காதேவி. எவ்வித பிரச்னைகள் வந்தாலும் தேவியின் பாதக்கமலங்களைப் பணிவது ஒன்றே அதற்குப் பரிகாரம் ஆகும். மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவியை அடைய முயலும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால் துர்கா மாதாவின் திருவடி நிழலைப் பிரார்த்திக்க வேண்டும்.

அஷ்டமி தினத்தில் துர்கைக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு வஸ்திரத்தைச் சமர்ப்பித்து வழிபடலாம். இதனால், வாழ்வில் சோதனைகள் நீங்கி சந்தோஷம் நிலைக்கும்.

துர்கா தேவிக்கு மிகப்பிடித்த. புஷ்பம் நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது. ராகுகால வேளையில் துர்காதேவியை மனதில் தியானித்து, நெய்தீபம் ஏற்றிவைத்து, நீலோத்பல மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

துர்கையை ஒன்பது துர்கை களாகப் பெயரிட்டுக் கூறுகின்றது. மந்திர சாஸ்திரம். அவை: குமாரி, த்ரிமூர்த்தி, கல்யாணி, ரோஹிணி, காளிகா, சண்டிகை, சாம்பவி, துர்கா, சுபத்ரா.

அதேபோன்று சுவாஸினி பூஜையிலும் சைலபுத்ரி, ப்ரம்ஹ சாரிணி, சந்த்ரகண்டா, கூஷ்மாண்டா, மகாகௌரி, காத்யாயனி, காளராத்ரி, மகாகௌரி, சித்திதாத்ரி ஆகிய ஒன்பது துர்கையர் இடம் பெறுகின்றனர். அம்பிகைக்கு உரிய விசேஷ காலங்களில், இந்த திருநாமங்களைக் கூறி போற்றிச் சொல்லி வழி படுவதால், வேண்டும் வரங்கள் யாவும் கிடைக்கும்.

துர்க்கையின் அற்புதத்தை விளக்கும் துர்கா சப்தசதி என்ற 700 ஸ்லோகங்கள் படிப்பது, நல்ல மனநிலையை ஏற்படுத்தும். இயலாதவர் கள் கீழ்க்காணும் பாடலைப் படித்து வழிபட்டு அன்னையின் அருளைப் பெறலாம்.

நாதமும் பிந்துவும் மந்திர தந்த்ரமும்
வேதமும் மூலப்ரக்ருதி விக்ருதியும்
போதப் பரபதச் சந்த்ர மயமாகும்
ஆதிபராசக்தி அம்மையைப் போற்றினேன்

Leave a Reply