தூக்கமின்மையால் பெண்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்?

தூக்கமின்மையால் பெண்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்?

பெண்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்கவேண்டும். தூக்கம் குறையும்போது அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

பெண்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்கவேண்டும். தூக்கம் குறையும்போது அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆழ்ந்து தூங்காத பெண்கள் உற்சாகமின்றி செயல்படுவார்கள். காரணமில்லாமல் கோபப்படுவார்கள். எரிச்சலான மனநிலையிலேயே மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். அவர்களது மனநிலையும் குழப்பமாக இருந்துகொண்டிருக்கும்.

போதுமான நேரம் தூங்காதவர்கள் கண் எரிச்சல், தலைவலியால் அவதிப்படுவார்கள். சரியான தூக்கம் இல்லாதது தலை வலிக்கு முக்கிய காரணமாக இருக்கும்.

குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள் சரியான தூக்கம் இன்றி சிரமப்படுவார்கள். அவர்கள் குழந்தைகள் நலனில் காட்டும் அக்கறை போலவே தங்கள் உடல்நலனிலும் கவனம் செலுத்த வேண்டும். போதிய நேரம் தூங்க வேண்டியது அவசியம். குழந்தைகள் தூங்கும் வேளையில் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

இரவில் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட்டுவிட வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு குடும்பத்தினர், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது என மனதை இலகுவாக்கிக்கொள்ள வேண்டும்.

காலையில் தினமும் நடைப்பயிற்சி அவசியம். அது சீரான தூக்கத்திற்கு துணைபுரியும். சிலர் காலையில் போதிய நேரம் கிடைக்கவில்லை என்று இரவில் உடற்பயிற்சி செய்வார்கள். இது தவறான பழக்கம். தூக்கமின்மை பிரச்சினைக்கு இரவு நேர உடற்பயிற்சியும் முக்கிய காரணம். தொடர்ந்து சரியான தூக்கமில்லாமல் அவதிப்படும் பெண்களுக்கு நீரிழிவு, இதய நோய் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

தூக்கமின்மை பிரச்சினை உடையவர்கள் காபி குடிப்பதை கைவிட வேண்டும். அதில் இருக்கும் காபின் காரணமாக மூளையில் செரோட்டின் சுரப்பு அளவு குறையும். தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கச்செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். தூங்கும் இடத்தில் அதிக வெளிச்சம் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

இரவில் ஆழ்ந்து தூங்க விரும்புகிறவர்கள் மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவதை தவிர்ப்பது அவசியம். மனக்கவலைகளை ஒதுக்கிவைக்கவேண்டும். படுக்கையில் அலுவலகப் பணிகளை செய்வதையும் தவிர்த்திடவேண்டும்.

Leave a Reply