தென் மாவட்டத்திற்காக மதுரையில் நவீன ஒட்டுனர் பயிற்சி பள்ளி: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
மதுரையில் தென் மாவட்டத்திற்கான நவீன ஒட்டுனர் பயிற்சி பள்ளி அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழக போக்குவரத்து துறையின் சார்பில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களின் சாலை பாதுகாப்பு பணிகள் குறித்து சீராய்வுக் கூட்டம் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை வகித்தார். போக்குவரத்து துறை ஆணையர் தயானந்த் கட்டாரியா முன்னிலை வகித்தார்.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, ‘‘சாலை விபத்தில், உயிர்ப்பலி ஆவதை தடுக்க ஓட்டுனர்கள் உரிமத்தின் அசலை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். போக்குவரத்தில் விதிமீறல் காரணமாக இதுவரை 49 ஆயிரத்து 783 பேரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில்தான் 17 சதவீத விபத்துகள் நடக்கிறது. அதில் அதிகளவில் உயிர்பலிகளும் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தவறான சில முடிவுகளால் இந்த ரோட்டில் விபத்து அதிகம் ஏற்படுகிறது. 68 இடங்கள் அதிகளவில் விபத்து ஏற்படும் பகுதி என ஆணையம் அறிவித்துள்ளது. நான்கு வழிச்சாலையில் 120 கி.மீ வேகத்தில்தான் வாகனங்கள் செல்கின்றன. ஓட்டுனர்கள் விதிகளை சரியாக கடைபிடிப்பது இல்லை.
நான்கு வழிச்சாலையில் கிராமமக்கள் ரோட்டை கடக்க போதிய அளவு சுரங்க பாதைகள், மேம்பாலங்கள் அமைக்க வில்லை. பஸ் ஸ்டாப், சிக்னல்கள் குறித்து முறையான அறிவிப்பு இல்லை. பல்வேறு குளறுபடிகள் காரணமாக சாலை விபத்துகள் ஏற்படுகிறது. டூவிலர் விபத்துகள் 39 சதவீதம் அதிகரித்துள்ளது. விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். போக்குவரத்து துறைக்கு என இந்தாண்டு ரூ.65 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
80 கி.மீ வேகத்திற்கு மேல் செல்ல கூடாது என்பதற்காக வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனத்தை கண்டுபிடித்து, அபராதம் விதிக்க காமிரா பொருத்தப்படும். தென்மாவட்டத்திற்கு என மதுரையில் நவீன பயிற்சி பள்ளி அமைக்கப்படும். இதற்கு ஓரே இடத்தில் 7 ஏக்கர் இடத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். 2020ம் ஆண்டிற்குள் விபத்துகளில் 50 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
போக்குவரத்துறை ஏடிஜிபி கரன்சின்ஹா, தென் மண்டல் ஐஜி சைலேஷ்குமார் யாதவ், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், கூடுதல் கலெக்டர் அம்ரித், எஸ்பி. மதிவாணன் மற்றும் ஆறு மாவட்ட வட்டார போக்குவரத்து துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்