தெருவில் இறங்கி போராட நீங்கள் என்ன தொழிலாளர்களா?

தெருவில் இறங்கி போராட நீங்கள் என்ன தொழிலாளர்களா?

மாணவர்களின் கல்வியைப் பற்றிக் கவலைப்படாமால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தெருவில் இறங்கி போராடுவதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு வாரத்துக்கு மேலாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். இதனால் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் வேலை நிறுத்தம் செய்யும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்துசெய்யவ வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன், “மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஜாக்டோ ஜியோ அமைப்பு அரசிடம் தங்கள் பணியைத் தொடர்வது குறித்து உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்” என்று அறிவுறித்தினார்.

ஆசிரியர் பணி மிகவும் உயர்வானது. ஆசிரியர்கள் பிரச்னைக்கு சட்டரீதியாக தீர்வு காணாமல், சாதாரண பணியாளர்களைப் போல தெருவில் இறங்கிப் போராடுவதா? தனியார் பள்ளிகளில் படிக்கும் அந்த ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் பணிக்குத் திரும்பும் வரை பாடம் கற்பிக்கக் கூடாது என உத்தரவிட்டால் ஏற்றுக்கொள்வார்களா?” என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் பொதுத் தேர்வுகள் நெருங்குவதால், தேர்வு முடியும் வரையாவது போராட்டத்தைக் நிறுத்திவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும் என்றும் தமிழக அரசும் நீண்டகாலமாக இருக்கும் இந்தப் பிரச்னையில் ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்யும் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்றும் நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

Leave a Reply