தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஜெயசுதா.
ஆந்திராவை சேர்ந்த இவர் மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி முதல்–மந்திரியாக இருந்தபோது அவரது முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். தொடர்ந்து செகந்திரபாத் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ராஜசேகர்ரெட்டி மறைவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி உடைந்து ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உதயமானது. ஆனாலும் ஜெயசுதா காங்கிரஸ் கட்சியிலேயே நீடித்தார்.
இதேபோல ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா தனி மாநிலம் உருவானது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயசுததா தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
நேற்று மாலை ஐதராபாத்தில் இருந்து விஜயவாடா வந்தார். அங்கு முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தெலுங்குதேசம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
ஜெயசுதாவுக்கு சால்வை அணிவித்து சந்திரபாபு நாயடு வாழ்த்தினார்.
தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தது ஏன்? என்பது குறித்து ஜெயசுதா கூறியதாவது:–
மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் காங்கிரசில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தேன். இனி மக்களுடன் இணைந்து கட்சிக்காக பணியாற்றுவேன். சந்திரபாபு நாயுடு காட்டும் வழியில் நடப்பேன்.
நான் தெலுங்கானாவில் போட்டியிட்டாலும் எனக்கு ஆந்திரா, தெலுங்கானா என்ற வேறுபாடு கிடையாது. ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. அந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிக்காக நான் பாடுபடுவேன். அங்கு மேயர் பதவியை தெலுங்குதேசம் கைப்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.