தேக நலம் தரும் தேங்காய் எண்ணெய்!
தேங்காய் எண்ணெய்யா… அது முழுக்க கொலஸ்ட்ரால்ப்பா! சாப்பிடவே கூடாது’ என்ற வதந்தியை யார் கிளப்பிவிட்டது எனத் தெரியவில்லை. தமிழகத்தில் பலரும் நம் பாரம்பரிய தேங்காய் எண்ணெயை உணவில் பயன்படுத்துவதைக் கிட்டத்தட்ட நிறுத்தியேவிட்டனர். வெளிநாட்டு இறக்குமதியான சன்ஃபிளவர் ஆயில், கார்ன் ஆயில், ரைஸ் பிராண்ட் ஆயில், ஆலிவ் ஆயில்தான் சிறந்தது என்று பயன்படுத்திவருகிறோம். இறக்குமதியின் ஆதிக்கத்தால், உடலுக்கு ஆரோக்கியம்தரும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதையே குறைத்துவிட்டோம். “உண்மையில், தேங்காய் எண்ணெய் உடல்நலத்துக்குக் கெடுதியா?” என்று மருத்துவர்களிடம் கேட்டால், “இல்லை” என்கின்றனர். தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்துக்கொள்வதிலும், வெளிப்புறமாகத் தோலில் பூசுவதாலும் பல பலன்கள் இருக்கின்றன. உடலுக்கு நலம் தருவதோடு, சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் கொண்டது தேங்காய்.
*தேங்காயில் 90 சதவிகிதம் சாச்சுரேட்டட் வகை கொழுப்பு இருக்கிறது. இது உடலுக்குப் பல்வேறு நற்பலன்களைத் தருகிறது.
*தேங்காய் எண்ணெயை முகத்திலும் லேசாகத் தேய்த்துவந்தால், முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும். முதுமையானவர்களுக்கு இருக்கும் தோல் சுருக்கம் (Wrinkles) தற்போது, பலருக்கு இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. தோல் சுருக்கத்துக்குச் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களைப் பயன்படுத்துவதைவிட, தேங்காய் எண்ணெயை முகத்தில் தேய்த்துவந்தாலே சுருக்கங்கள் வருவது தடுக்கப்படும்.
*தேங்காய் எண்ணெயை தினமும் சமையலில் ஏதாவது ஒரு வகையில் சேர்க்க வேண்டும். ஆனால், டீப் ஃபிரை மற்றும் துரித உணவுகளில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் எந்தப் பலனும் இருக்காது. நம் வழக்கமான சமையலில், சாம்பார், கூட்டு, கீரை, பொரியல் என ஏதோ ஒரு வகையில் தினமும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
*அதீத வெப்பம் காரணமாக, சருமத்தில் கறுப்புத் திட்டுகள் அதிகமாக உருவாகும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், இது தடுக்கப்படும். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அனைவரும் பயன்படுத்தக்கூடிய, எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லாத சன் ஸ்க்ரீன், தேங்காய் எண்ணெய்.
*தேங்காய் எண்ணெய் மூளை சிறப்பாகச் செயல்பட உதவும். அல்சைமர் போன்ற ஞாபகமறதி பிரச்னைகளைத் தடுக்கும். தைராய்டு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கும்.
*தோலில் ஏற்பட்டுள்ள தழும்புகள் மறைய, தேங்காய் எண்ணெய் துணைபுரிகிறது. கை, கால் மூட்டுகளில் பலருக்கும் கறுப்பு நிறத்தில் அடர்ந்தத் திட்டுகள் இருக்கும். இவர்கள், தொடர்ந்து தேங்காய் எண்ணெயை அந்தப் பகுதியில் பயன்படுத்திவந்தால், பிரச்னை சரியாகும்.
*சருமத்தின் தரம், பொலிவு என இரண்டுக்கும் தேங்காய் எண்ணெய் துணைபுரிகிறது. தேங்காய் எண்ணெயை வெளியே தேய்ப்பதால் மட்டும் அல்ல, உணவு மூலமாக உள்ளுக்கு எடுத்துக்கொள்வதாலும் சருமம் பொலிவுபெறும். இது ஆன்டிபாக்டீரியா தன்மை கொண்டிருப்பதால், கிருமித்தொற்றைத் தவிர்த்து, சிராய்ப்புக் காயங்களை ஆற்றும்.
*தேங்காய் எண்ணெயில் உள்ள நல்ல கொழுப்பு, பெண்களின் அடி வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்புகளைக் கரைக்க உதவும்.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிட்ட பிறகு, வெந்நீர், மோர் போன்றவற்றைக் குடிக்கலாம். பகல் தூக்கம் கூடாது. ஐஸ்கிரீம் சாப்பிடுவது, குளிர்ந்த நீர், குளிர்பானம் அருந்துவது தவிர்க்க வேண்டும்.