தேசிய அளவிலான கட்டடவியல் நுண்ணறி தேர்வில் புதிய மாற்றம்

தேசிய அளவிலான கட்டடவியல் நுண்ணறி தேர்வில் புதிய மாற்றம்

ஐந்தாண்டு இளநிலை கட்டடவியல் பொறியியல் (பி.ஆர்க்.) படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான கட்டடவியல் நுண்ணறி தேர்வில் (நாடா) புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, 2017 -ஆம் ஆண்டுக்கான “நாடா’ தேர்வு, ஒரே நாளில் பேப்பர் அடிப்படையிலான நேரடி தேர்வாக நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கட்டடவியல் திட்டக் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் பி.ஆர்க். படிப்பு உள்பட நாடு முழுவதும் உள்ள அரசு தனியார் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பி.ஆர்க். படிப்பில் சேர “நாடா’ தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இந்தத் தேர்வை கட்டடவியல் கவுன்சில் கடந்த 2006 -ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.

தேர்வு எப்போது? 2017 -ஆம் ஆண்டுக்கான “நாடா’ தேர்வு வரும் ஏப்ரல் 16 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க பிப்ரவரி 2 கடைசி நாளாகும். தேர்வுக் கட்டணம் ரூ. 1,250 ஆகும். தேர்வு முடிவு ஜூன் 10 ஆம் தேதி வெளியிடப்படும்.

ஒரே நாளில் தேர்வு: கடந்த 2016 ஆம் ஆண்டு வரை “நாடா’ தேர்வானது 3 மாதங்கள் முதல் 4 மாதங்கள் வரை தொடர்ச்சியாக ஆன்-லைன் முறையில் நடத்தப்படும். 2016 ஆம் ஆண்டுக்கான “நாடா’ தேர்வு கடந்த ஏப்ரல் 1 முதல் மே 28 வரையிலும் பின்னர் மீண்டும் ஜூன் 6 முதல் ஆகஸ்ட் 20 வரையிலும் தொடர்ந்து நடத்தப்பட்டது.

இதில் ஒரு மாணவர் 5 முறை தேர்வில் பங்கேற்கலாம். இந்த 5 முறையில் சிறந்த மதிப்பெண் அடிப்படையில் பி.ஆர்க். சேர்க்கைக்கான முயற்சியை அவர் மேற்கொள்ளலாம்.

இப்போது இந்த நடைமுறையை கட்டடவியல் கவுன்சில் மாற்றியுள்ளது.
கட்டடவியல் படிப்பில் அதிக மாணவர்களை சேர வைக்கும் நோக்கத்துடன் பல மாதங்களுக்கு இந்தத் தேர்வை நடத்தும் நடைமுறையும், ஆன்-லைன் முறையில் நடத்துவதையும் கவுன்சில் கைவிட்டுள்ளது.

இதனால், 2017 -ஆம் ஆண்டுக்கான தேர்வு, நாடு முழுவதும் ஒரே நாளில் பேப்பர் அடிப்படையில் நேரடித் தேர்வாக நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply