தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய கேபினட் அமைச்சர். பஞ்சாபில் பெரும் பரபரப்பு
இந்தியா முழுவதும் நேற்று முன் தினம் 69வது சுதந்திரதினம் வெற்றிகரமான கொண்டாடப்பட்ட நிலையில் பஞ்சாபில் நேற்று முன் தினம் நடைபெற்ற சுதந்திர தின விழா ஒன்றில் கேபினட் அமைச்சர் விக்ரம் சிங் மஜிதிகா அவர்கள் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி அவமதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமிர்தசரஸ் நகரில் உள்ள குருநானக் கலையரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட விக்ரம் சிங் தேசிய கொடியான மூவண்ணக் கொடியை தவறுதலாக தலைகீழாக ஏற்றினார். அதுமட்டுமின்றி கொடி தலைகீழாக பறப்பதை அறியாமல் விக்ரம் சிங், துணை ஆணையர் ரவி பகத், நகர காவல்துறை ஆணையர் ஜதீந்தர் சிங் ஆகியோர் அதற்கு வணக்கமும் செலுத்தினர். தொடர்ந்து அமைச்சர் விக்ரம் சிங் சுதந்திர தின உரை பேசும்போதும்,தேசிய கொடி தலைகீழாகவே பறந்துகொண்டே இருந்தது விழா முடியும் தருவாயில்தான் இந்த தவறு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் உடனே சரிசெய்யப்பட்டது.
இதுகுறித்து விக்ரம் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இந்த தவறு எப்படி நிகழ்ந்தது என்று மாவட்ட நிர்வாகம் தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.