தைராய்டு இருப்பதை தெரிந்து கொள்வது எப்படி?
உடம்பு கொஞ்சம் பூசினாற்போல இருந்தாலே தைராய்டு பிரச்னையாக இருக்கலாம் என்பார்கள். கழுத்துப்பகுதி வீங்கியிருந்தாலும் அது தைராய்டு குறைபாட்டின் அறிகுறி என்பார்கள். அந்த அளவுக்குத் தைராய்டு மீதான பயம் அதிகரித்திருக்கிறது.
தைராய்டு என்பது கழுத்துப்பகுதியில் உள்ள ஓர் நாளமில்லாச் சுரப்பி. இதில் இரண்டு வகைகள் உள்ளன. அளவுக்கு அதிகமாகத் தைராய்டு சுரப்பது, அளவைவிடக் குறைவாகச் சுரப்பது. தைராய்டு இருப்பதைக் கண்டறிய, பொதுவான சில அறிகுறிகள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்று தென்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அறிகுறிகள்
அளவுக்கதிகமாக உடல் எடை ஏறுவது/குறைவது, முடி உதிர்வு, உடல் மற்றும் தசைகளில் வலி ஏற்படுவது, படபடப்பு, பதற்றம் அதிகம் ஏற்படுவது, நீர்க்கோத்து இருத்தல், மாதவிடாய்க் காலத்தில் அதிக ரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவை.
என்னென்ன பாதிப்புகள்?
* ஹார்மோன் குறைபாடுகள்.
* தொண்டைப் பகுதியில் கட்டிகள்.
* குரல்வளையில் வீக்கம்.
* தைராய்டுப் புற்றுநோய்.
* மாதவிடாய் பிரச்னைகள்.
* குழந்தையின்மைக் கோளாறுகள்.
செய்துபாருங்கள் செல்ஃப் டெஸ்ட்
முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்தபடியே, தண்ணீர் குடியுங்கள். தொண்டைக்குழிப் பகுதியைக் கவனியுங்கள். தலையை லேசாகப் பின்பக்கம் சாயுங்கள். சாதாரண நிலையில் தண்ணீர் குடிக்கும் போது உங்கள் தொண்டைக்குழியானது மேலெழும்பி பிறகு உள்ளே போகும். தண்ணீரை விழுங்கும்போது தொண்டைக்குழியில் ஏதாவது கட்டியோ, வேறு ஏதேனும் அசாதாரணமான அறிகுறியோ தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
ரத்தப்பரிசோதனை மூலம், மருத்துவர் தைராய்டு குறைபாடு இருக்கிறதா இல்லையா என உறுதி செய்வார். அதற்கான சிகிச்சைகளைச் சில மாதங்கள் தொடர்வதன் மூலம், முழுமையாக இப்பிரச்னையைச் சரிசெய்யலாம்.