தொப்பை இருக்கும் போலீசாருக்கு பதக்கம் கிடையாது. உள்துறை அமைச்சகம் அதிரடி
காவல்துறையில் சேரும்போதும், பயிற்சியின்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் பலர் போஸ்டிங் கிடைத்தவுடன் ஒருசில வருடங்களில் தொப்பையுடன் தோற்றமளிப்பதால் பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாவது உண்டு. இந்த நிலையில் தொப்பை போலீசாருக்கு வெற்றிப் பதக்கங்கள் இனி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் போலீசாருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் உட்பட பல்வேறு பதக்கங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்த சுற்றறிக்கை ஒன்று உள்துறை அமைச்சகம் சார்பில், மத்திய, மாநில போலீஸ் அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி, சிறந்த சேவைக்காக பதக்கம் பெறும் போலீசார், பணி மூப்பு, சேவை மட்டுமல்லாமல் உடல் தகுதியும் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக போலீசாருக்கு தொப்பை இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் பதக்கங்கள் பெறுவதற்கு போலீசாரின் பெயர் பரிந்துரைக்கப்படாது.
மேலும் போலீசாரின் உடல் தகுதி வடிவம் – 1 மற்றும் வடிவம் – 2 என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடிவம் – 1ல் உள்ள போலீசார் மட்டுமே, குடியரசுத் தலைவர் பதக்கம் பெற பரிசீலிக்கப்படுவர்.