தொலைந்த மொபைல் போனை ஒருசில நிமிடங்களில் கண்டுபிடித்த சென்னை போலீஸ். எப்படி தெரியுமா?
மொபைல் போன் என்பது மிக எளிய முறையில் திருடுபோகும் ஒரு பொருள். நமது உடைகளில் உள்ள பைகளில் இருந்தோ அல்லது கைப்பையில் இருந்தோ கைதேர்ந்த திருடர்களுக்கு மொபைல் போனை திருடுவது என்பது எளிதான விஷயமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் திருடு போன மொபைல் போனை கண்டுபிடிப்பது என்பதும் சாதாரண விஷயம் இல்லை. திருடப்பட்ட மொபைல் உடனடியாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு பின்னர் அதன் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டால் அந்த மொபைல் போனை போனுக்கு உரியவர் மறந்துவிட வேண்டியதுதான்
ஆனால் சென்னை வாலிபர் ஒருவரின் தொலைந்த மொபைல்போனை ஒருசில மணி நேரங்களில் கண்டுபிடித்து சென்னை போலீஸ் சாதனை செய்துள்ளது. சென்னையை சேர்ந்த சுனைஸ் ரெஹ்மான் என்ற 20வயது வாலிபர் ஒருவர் சமீபத்தில் தனது மொபைல் போனை தொலைத்துவிட்டார். ஆனால் அதற்காக அவர் சிறிதுகூட கவலைப்படவில்லை. அவருடைய மொபைல் போனில் McAfee security என்ற செயலியை அவர் இன்ஸ்டால் செய்திருந்தார். இந்த செயலி, போனை மூன்’று முறைக்கு மேல் தவறான பேட்டர்ன் (pattern)ஐ பயன்படுத்தினால் உடனடியாக செல்பி எடுத்து போனுக்குரியவருக்கு இமெயில் அனுப்பிவிடும். அதுமட்டுமின்றி போன் இருக்கும் இடத்தையும் நேரத்தையும் தெரிவித்துவிடும்
இதுபோல் போனில் இருந்து வந்த இமெயிலை பிரிண்ட் எடுத்து வாலிபர் ரெஹ்மான் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இமெயிலில் வந்த புகைப்படம், அதில் இருந்த நேரம், இடம் ஆகியவற்றை வைத்து சைபர் க்ரைம் காவல்துறையின் உதவியால் போலீசார் ஒருசில மணி நேரத்தில் திருடனை பிடித்துவிட்டனர்.
இதுகுறித்து ரெஹ்மான் கூறியபோது McAfee security என்ற செக்யூரிட்டி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்து கொண்டால் அனைவரும் இதேபோன்று தங்கள் மொபைல் திருடு போனால் எளிதில் மீட்டுவிடலாம் என்று தெரிவித்தார்.