தொல்லியல் துறையில் வேலைதரும் கல்வெட்டியல்
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகத்துக்கு அடுத்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்தான் கல்வெட்டியல், தொல்லியல் படிப்பு உள்ளது. இதுதவிர, கேரளப் பல்கலைக்கழகத்தில் இருக்கிறது.
இதுகுறித்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல், தொல்லியல் துறைத் தலைவர் ஆ. துளசேந்திரன் தெரிவித்தது:
வரலாற்றை எழுதுவதற்கு அடிப்படையாக விளங்கும் கல்வெட்டியலும், தொல்லியலும் இல்லாமல், ஒரு நாட்டின் முழுமையான வரலாற்றைப் பெற இயலாது.
வரலாற்றுக்கு காலமும், இடமும் இரு கண்கள் போன்றவை. குறிப்பாக, தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில்தான் தமிழக வரலாற்றின் காலவரை நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழக வரலாற்றை எழுதுவதற்கான அடிப்படைச் சான்றுகளைத் தொகுப்பது, உயராய்வில் ஈடுபடுவது போன்றவையே இத் துறையின் நோக்கம். இத் துறையில் நடத்தப்படும் வரலாறு, தொல்லியல் பாடங்களில் பழங்காலம் முதல் இடைக்காலம் வரையிலான வரலாற்றை எழுதுவதற்குத் தேவையான குறிப்புகள் உள்ளன.
இதில் தமிழக வரலாறு, இந்திய வரலாறு, கல்வெட்டியல், தொல்லியல், அருங்காட்சியகம், உலக வரலாறு உள்ளிட்டவை தொடர்பான பாடங்கள் உள்ளன. குறிப்பாக, கல்வெட்டைப் படியெடுத்துப் படித்தல், அதன் சுருக்கத்தை எழுதுதல், அகழாய்வு மூலம் தெளிவுபடுத்துதல் ஆகியவற்றுக்குப் பயிற்சி அளிக்கும் விதமாக பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் துறையில் 2003 முதல் இதுவரை 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து பயனடைந்துள்ளனர். இவர்களில் பலர் இந்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, அருங்காட்சியகம் ஆகியவற்றில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மற்றவர்கள் கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிவாய்ப்புப் பெற்றனர். மேலும், தனியார் சுற்றுலா நிறுவனங்களில் சுற்றுலா வழிகாட்டியாகவும் பணி வாய்ப்பு கிடைக்கும்.
இந்தத் துறை மூலம் பல அரிய தொல்லியல், கல்வெட்டுச் சான்றுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தத் துறை கண்டுபிடித்த “தமிழ் பிராமி’ எழுத்துப் பொறித்த கி.மு. 4 }ஆம் நூற்றாண்டைச் சார்ந்த புலிமான் கோம்பை நடுகல் – கல்வெட்டு சங்க இலக்கியக் குறிப்புகளை மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளது.
இத்துறையில் இரண்டாண்டு கால எம்.ஏ., எம்.ஃபில். பிஎச்.டி. ஆகிய படிப்புகள் உள்ளன. இவற்றில் எம்.ஏ. படிப்பில் சேர பி.ஏ. வரலாறு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.ஃபில். படிப்பில் சேர எம்.ஏ. வரலாறு அல்லது எம்.ஏ. கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் படிப்பும் தேர்ச்சி பெற வேண்டும். இந்தப் படிப்புகள் அனைத்தும் தமிழ் வழியில் நடத்தப்படுகின்றன.