தொழில்கள் தோல்வியடைய என்ன காரணம்?
இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நன்றாகவே உள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் பிசினஸ் செய்யவேண்டுமென்ற ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ‘ஸ்டார்ட் அப்’ கலாசாரம் பிரபலமடைந்து வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், வாகன சேவை, நிதிச் சேவை என பல வகைகளிலும் புதிய புதிய ஸ்டார்ட் அப்களுக்கு இந்தியச் சந்தையில் வாய்ப்புகள் வேகமாக உருவாகி வருகின்றன. இந்தியாவில் இதுவரை ரூ.52 ஆயிரம் கோடி அளவுக்கு ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யபப்பட்டுள்ளன.
ஆனாலும், ஒரு சில ஸ்டார்ட் அப்கள் மட்டுமே வெற்றி அடைகின்றன; பெரும்பாலான ஸ்டார்ட் அப்கள் தோல்வி அடைந்து காணாமல் போய் விடுகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.
புதிதாகத் தொடங்கப்படும் ஸ்டார்ட் அப்களில் பத்தில், எட்டு முதல் ஒன்பது ஸ்டார்ட் அப்கள் தோல்வி அடைவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதன் காரணமாகவே, 2014-ல் செய்யப்பட்ட முதலீட்டைவிட 50% அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட முதலீடு 2015-ல் சாத்தியமாகாமல் போனது. பல ஸ்டார்ட் அப்கள் தங்கள் பிசினஸை மூடிவிட்டன அல்லது வேறு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டன. இதற்கு காரணம், பிசினஸ் பற்றிய அடிப்படை விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாததுதான்.
வெற்றிகரமான ஸ்டார்ட் அப் பிசினஸை செய்ய முதலில் தோல்விக்கான காரணங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். தோல்விக்கான காரணங்கள் என்னென்ன?
இது பற்றி செய்யப்பட்ட பல ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, தொழில் முனைவோர்கள் தோல்வி அடைவதற்கு முதல் காரணம், பிசினஸுக்கான சந்தை இல்லாமல் இருப்பதே. அதாவது, ஒரு பிசினஸானது அதன் வாடிக்கையாளர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இல்லாமல் போவது.
இந்த நிலையில் நான் சொல்ல நினைப்பது, ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு போன்றோர் சொன்ன அதே அறிவுரைதான். “மக்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கு பல சமயங்களில் தெரிவதில்லை. நாம்தான் அவர்களுக்கு அதைச் சொல்ல வேண்டும். 1900-களில் மக்களிடம் போய், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டிருந்தால், வேகமாக ஓடும் குதிரைகள் வேண்டும் என்றுதான் அவர்கள் சொல்வார்கள்” என்கிறார் ஃபோர்டு. உண்மையில் மக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.
அதேசமயம், சந்தையானது எல்லாப் பொருட்களுக்கானத் தேவையையும் உருவாக்கும்; தொழில் புரட்சியைச் செய்யும் என்று சொல்ல முடியாது. எனவே, பல நேரங்களில் தொழில் முனைவோர்கள் தங்களது கனவு திட்டங்களைச் சுமந்து கொண்டு, ஒருநாள் நிச்சயம் மக்களின் தேவைகளை இது பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை யுடன் வெற்றி அடையும்வரை உழைக்க வேண்டும்.
தோல்விக்கு மற்றொரு முக்கியமான காரணம், பணம். அதாவது, போதுமான முதலீடு இல்லாமை. இது நேரடிக் காரணமாக இல்லாவிட்டாலும், சில விஷயங்களுக்கு இது மிக அவசியம். 2015-ல் அடையாளம் காணப்பட்ட 388 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களில், 21 ஸ்டார்ட் அப்களுக்கு மட்டுமே நிதி உதவி கிடைத்தது; 435 சில்லறை வர்த்தக ஸ்டார்ட் அப்களில், 15-க்கு மட்டுமே தரப்பட்டது. 192 நிதி சார்ந்த ஸ்டார்ட் அப்களில் 8 நிறுவனங்களுக்கு மட்டுமே முதலீடு கிடைத்தது.
சில சமயங்களில் அதிக முதலீடும் தோல்விக்கு காரணமாகிவிடும். இந்தியாவில், ஏற்கெனவே சந்தையில் பிரபலமாக உள்ள தொழில்களைச் செய்ய நினைக்கும்போது, எளிதில் முதலீடு கிடைத்துவிடுகிறது. ஆனால், அந்தத் தொழிலை வெற்றி பெற செய்வதற்கான நுணுக்கங்களும் உத்தி களும் இல்லாமல் தோல்வி அடைந்துவிடுகிறார்கள்.
தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்களில் தோல்வி ஏற்பட இன்னொரு முக்கிய காரணம், போதுமான சோதனைகளைச் செய்யாமல் பிசினஸைத் தொடங்குவது. ஏனெனில் பிசினஸில் குறைகள் இருக்கும்பட்சத்தில், உடனே வாடிக்கையாளர்கள் வேறு பக்கம் போய்விடுவார்கள். அவர்களுக்கு ஏராளமான தேர்வுகள் இருக்கும் நிலையில் நம்முடைய புராடக்ட் அல்லது சர்வீஸ் நம் போட்டியாளர் களைவிட மேலானதாக இருக்க வேண்டுமே தவிர, குறைச்சலாக இருக்கக் கூடாது.
தோல்வி அடைய பெரும்பாலானோருக்கு தெரியாத ஒரு காரணமும் உள்ளது. அதுதான் எதிர்பார்ப்பு. பல நேரங்களில் நிறுவனர்களும் முதலீட்டாளர்களும் நடைமுறைக்கு சாத்திய மில்லாத எதிர்பார்ப்புகளை வைத்திருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானோர் 5 முதல் 8 வருடங்களில் தொழிலைக் கைவிடுகிறார்கள். முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தைக்கும் மேற்கத்திய சந்தைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நடைமுறையில் ஒரு நிறுவனம் தொழிலில் நிலைத்து நிற்க 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும். பொதுப்பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.
தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள்!
‘தோல்வியே வெற்றிக்கு முதல்படி’ என்று நாம் பழமொழி சொன்னாலும், தோல்வி என்பது இந்தியர்களைப் பொறுத்தவரை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதுதான் உண்மை. ஏனெனில் இந்தியர்கள் தோல்வியையும் தோல்வி அடைந்தவர்களையும் பார்க்கிற விதம் அப்படி. தோல்வி ஏற்படுத் தும் பாதிப்பு குழுவிலுள்ள அனைவர் மீதும் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். ஆனாலும், தற்போது அந்த நிலை சற்று மாறி வருகிறது; பல நிறுவனர்கள் தங்களின் தவறை ஒப்புக்கொள்கிறார்கள்; தோல்வி களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். சிலிகன் வேலி கலாசாரத்தில், தோல்வியைக் கொண்டாடுவதும், பகுப்பாய்வு செய்வதும் சகஜம். இங்கேயும் அது வளரத் தொடங்கியுள்ளது.
வெற்றி பெற என்ன வழி?
ஸ்டார்ட் அப்பைப் பொறுத்த வரை, சரியான திட்டமிடல், தொழில்நுட்ப நிபுணத்துவமும், சந்தையைப் பற்றிய அறிவும் கொண்ட திறமையான குழு, வித்தியாசமான, மக்களுடன் தொடர்புடைய பொருள் அல்லது சேவை, சரியான பங்குதாரர்கள் ஆகியவை மிக முக்கியம். இவற்றில் ஒரு ஸ்டார்ட் அப் பாஸாகிவிட்டாலே போதும் பிசினஸில் நிலைத்து நின்று விடலாம்.
அதைவிட பெரும்பாலான தொழில்முனைவோர்கள், மென்டார், அதாவது வழிகாட்டி என்ற முக்கியமான விஷயத்தைத் தவிர்த்துவிடுகின்றனர். ஃபேஸ்புக் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ மார்க்குக்கு, ஸ்டீவ் ஜாப்ஸ் ஆரம்பத்தில் மென்டாராக இருந்தார் என்பதையும், பில்கேட்ஸ் தனது மென்டாராக வாரென் பஃபெட்டை அடிக்கடி குறிப்பிடுவதையும் நாம் மறந்து விடக்கூடாது. மென்டாரின் உதவியினால் மட்டுமே ஒரு தொழில்முனைவோர், தனது அன்றாட பிசினஸ் அழுத்தத்தில் இருந்து வெளியே வந்து தொழிலில் உள்ள பிரச்னைகளைக் கண்டுபிடிக்கவும் அதற்கான தீர்வுகளைக் கண்டு சரிசெய்யவும் முடியும். அதனால் துறை சார்ந்த நிபுணத்துவம் பெற்ற வழிகாட்டி ஒருவரை நிச்சயம் கலந்தாலோசிக்க வேண்டும்.
ஒவ்வொரு தொழில்முனை வோரும் தனது பிசினஸில் வெற்றி பெற, தொழிலில் உள்ள பிரச்னைகளைக் கண்டுபிடித்து தீர்வு காணவும், புதிய யோசனை களைப் பகிர்ந்துகொள்ளவும், நிதி முதலீடுகளுக்காகவும் தங்கள் ஊழியர்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். எங்களுடைய டபிள்யுஎன்எஸ்-ல் எங்கள் ஊழியர்களுக்கு வின்குபேட் (WiNCUBATE) என்கிற தொழில் முனைவு போட்டி ஒன்றை நடத்துவோம். அதில் நல்ல ரிசல்ட்டையும் பார்க்க முடிந்தது.
நாஸ்காம்-சினோவ் அறிக்கையில், 2020-ல் இந்தியாவில் 11,500 தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப்கள் இருக்கும் என்று சொல்லப் பட்டுள்ளது. தற்போது 4,200-க் கும் மேற்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியா வில் ஸ்டார்ட் அப்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதையே இது காட்டுகிறது.
தோல்விகள் என்பது நமது ஸ்டார்ட் அப் வளர்ச்சிப் பாதையில் கொஞ்சம் கடினமான மைல்கற்கள்தான். ஆனால், தோல்விகளைப் பற்றி கலந்தாலோசித்து, அவற்றிலிருந்து மீண்டு எழும் நம் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி, தோல்விகளுக்குப் பிறகு புத்தம் புதிதாக பிசினஸைத் தொடங்க நினைத்தால், உலக அரங்கில் இந்தியா ஸ்டார்ட் அப்புக்கு முன்னோடியாக மாறும் தருணம் வெகுதொலைவில் இல்லை.
மோடியின் ‘பிரகதி’ இந்தியாவை வல்லரசாக மாற்றுமா?