தொழில்பயிற்சியால் வேலைவாய்ப்பு பெறுவோர் 7 சதவீதமாக உயர்வு: துணை வேந்தர் சி.சுவாமிநாதன்
உணவு அறிவியல் மற்றும் ஜவுளித் துறை சார்ந்த தொழில் பயிற்சியால், வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை 7 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.
பெரியார் பல்கலைக்கழக உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சார்பில், இளநிலை தொழில்சார் கல்வி பயிலும் மாணவர்களுக்காக மிகப்பெரிய உணவுப் பொருள்களை வாங்குவதற்கான வழிமுறைகள் குறித்த பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உணவு அறிவியல் துறைத் தலைவர் த.பூங்கொடி தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் எம்.தீபா வரவேற்றார்.
பயிலரங்கைத் தொடங்கி வைத்து துணை வேந்தர் சி.சுவாமிநாதன் பேசியது: தேசிய திறன் வளர்ப்பு நிறுவனம், வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் பாடங்களை தொடங்க அறிவுறுத்தியதின் பேரில், பெரியார் பல்கலைக்கழகத்தில் உணவு அறிவியல் மற்றும் ஜவுளித் துறையில் தொழில்சார் இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம், தக்க தொழில்நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு பருவத்திலும், வேலைவாய்ப்புக்கான 60 சதவீதத்துக்கும் அதிகமான செயல்முறை சார்ந்த கல்வி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மற்ற இளநிலைக் கல்வியில் இருந்து வேறுபட்டு, தொழில்சார் இளநிலைக் கல்வி சுயதொழில் தொடங்குவதற்கான உந்துதலையும் ஏற்படுத்தி வருகிறது.
தக்க பயிற்சிகளுடன் தொழில்சார் நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் இக்கல்வி முறை, தேசிய திறன் வளர்ப்பு நிறுவனத்தின் உதவியுடன் கற்பிக்கப்படுகிறது. இதன்மூலம், வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை மேலும் 7 சதவீதம் உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார்.
இந்தப் பயிலரங்கில் தரம் மிக்க உணவுப் பொருள்களை வாங்குதல், தரத்தினை சரிபார்த்தல், வாங்கிய பொருள்களை பாதுகாத்தல் மற்றும் அனைத்து செயல்களையும் மென்பொருள் வாயிலாக செயலாற்றும் முறை குறித்து நிபுணர்கள் மதன்மோகன்ராஜ், பிரபு, லெனின் ஆகியோர் பயிற்றுவித்தனர்.
நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர்கள் மனோகர், செல்வலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.