தொழில் தொடங்க சிறந்த மாநிலம்: தமிழகம் பின்னடைவு
எளிதாக தொழில் நடத்த உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 15வது இடமே கிடைத்துள்ளது. இதனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி கேள்விக்குறியாகியுள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எளிதாக தொழில் தொடங்கி நடத்த உகந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஆய்வு செய்து மத்திய தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை தரவரிசை பட்டியல் தயாரித்து வெளியிட்டு உள்ளது.
இந்த ஆய்வில் தொழில் தொடங்க கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்குதல், தொழிலாளர்கள் நலன், சுற்றுச்சூழல் ஒப்புதல், தகவல் பெறும் வசதி, நிலம் கையிருப்பு, ஒற்றைச்சாளர முறையில் விரைவான அனுமதி ஆகிய முக்கிய அம்சங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்படி தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரபிரதேசம் முதல் இடத்தை பிடித்து உள்ளது. 2-ம் இடத்தில் தெலுங்கானா மாநிலமும், 3-ம் இடம் அரியானா, 4-ம் இடம் ஜார்கண்ட், 5-ம் இடம் குஜராத், 6-ம் இடம் சத்தீஷ்கார், 7-ம் இடம் மத்திய பிரதேசம், 8-ம் இடம் கர்நாடகம், 9-ம் இடம் ராஜஸ்தான், 10-ம் இடம் மேற்கு வங்காளம் மாநிலங்கள் ஆகியவை உள்ளன.
தமிழ்நாட்டுக்கு 15-வது இடமும், டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு 23-வது இடம். கடைசி இடம் மேகாலயாவுக்கும் கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.