தொழில் ரகசியம்: உங்க சொத்து ஏன் சோம்பேறியா இருக்கணும்?
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைபவர்கள் உண்டு. நெற்றியில் மாட்டிக்கொண்டு கண்ணாடியை மற்ற இடங்களில் தேடுபவர்கள் உண்டு. வாழ்க்கையில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் இப்படி தேடுவோர் ஏராளம். வருவாய் திறன் இருந்தும் அதை பயன்படுத்தாமல் லாபத்தை வேறு இடங்களில் தேடுவார்கள். வருவாய் திறன் கொண்ட சொத்து தன்னிடம் பயன்படாமல் சும்மா கிடப்பதையே பலர் உணர்வதில்லை. வருவாய் ஈட்டித் தரும் வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு லாப நெய்யை வெளியில் தேடுகிறார்கள்.
எந்த தொழிலாகட்டும் அதற்கு வருவாய் ஈட்டித் தரும் திறனுள்ள விஷயங்கள் மறைந்து புதைந்து கிடக்கும். பாசி படிந்து புதைந்திருக்கும் அதை தூசி தட்டி எடுத்து சுத்தம் செய்து திட்டம் போட்டு பயன்படுத்தும்போது அது லாபம் ஈட்டித் தரத் துவங்குகிறது. அப்படி தூங்கிக் கொண்டிருக்கும் வருவாய் ஈட்டித் தரும் திறனுள்ள விஷயங்களை சோம்பேறி சொத்துகள் (Lazy assets) என்கிறார்கள்!
உதாரணத்திற்கு ‘போஸ்ட் இட்’ கதையைப் பார்ப்போம். ‘3M’ கம்பெனியின் உலகமகா ஹிட் பிராண்ட். நீங்கள் பார்த்திருப்பீர்கள். பயன்படுத்தியிருப்பீர்கள். கலர் கலராக உள்ளங்கை அளவு பேப்பர். அதில் ஏதாவது எழுதி அந்த நேரத்திற்கு எங்கு வேண்டுமானாலும் ஒட்டி வைத்து தேவைப்படாத போது பிய்த்து எறியும் சவுகரியம் கொண்டது. அகஸ்மாத்தாக அமைந்து அட்டகாசமாய் அரங்கேறிய அதிசயம் இந்த அற்புதமான பிராண்ட்.
3M கம்பெனி விஞ்ஞானி ஒருவர் ஒரு பிசினை கண்டுபிடித்தார். ஒட்டிக்கொள்ளும்படி இருந்தாலும் அதன் விசேஷ தன்மையால் வேண்டாம் எனும் போது பிய்த்து எடுக்கும் தன்மையுடன். வித்தியாசமான பிசின் தான், ஆனால் எதற்கும் பயன்படாததும் கூட. ஒழுங்காய் ஒட்டாத ஒன்றை வைத்துக்கொண்டு என்னத்தை செய்வது என்று அந்த கண்டுபிடிப்பு கம்பெனியின் ஒரு மூலையில் தூக்கி எறியப்பட்டு சோம்பேறியாய் பல காலம் கிடந்தது.
3M கம்பெனி ஊழியர் ஒருவர் சர்ச்சிற்கு வாரந்தோறும் சென்று ஸ்தோத்திரங்கள் பாடும் பழக்கம் உடையவர். சர்ச் டேபிளில் ஸ்லோக பேப்பரை வைத்து அதை பார்த்துக்கொண்டே பாடுவார். ஆனால் ஒவ்வொரு முறையும் பாடும்போது அந்த பேப்பர் கீழே விழுந்துகொண்டே இருந்தது. ‘என்னடா இது ஸ்தோத்திரம் பாட உபத்திரவம்’ என்று அவர் யோசிக்கும் போது அலுவலக கிடப்பில் போடப்பட்டிருந்த தற்காலிக பிசின் நினைவிற்கு வந்தது. அதை ஸ்தோத்திர பேப்பர் மீது தடவி டேபிளில் ஒட்டி பாடுவார். பிரேயர் முடிந்து சர்ச்சிலிருந்து கிளம்பும் போது பேப்பரை மீண்டும் ஈசியாய் பிய்த்து எடுத்துக்கொண்டு வீடு திரும்புவார்.
இதை சில காலம் செய்து வந்தவர் இந்த ஐடியாவை கம்பெனிக்கு கூற பிரேயர் சொல்பவருக்கு சௌகரிப்படும் இந்த விஷயம் மக்களுக்கு பயன்படலாமே என்று 3M இதை போஸ்ட் இட் என்ற பெயரிட்டு அறிமுகப்படுத்தியது. அதன் பிசின்தான் தற்காலிகமானது, பிராண்டோ உலக மக்கள் மனதில் நீங்காமல் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டது. விற்பனை பிய்த்துக்கொண்டு பறக்க போஸ்ட் இட் 3M-மின் மிகப் பெரிய வெற்றி பிராண்டுகளில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது!
உங்கள் தொழிலில் தோண்டித் துருவிப் தேடிப் பாருங்கள். இது போல் பல ‘போஸ்ட் இட்’ ஐடியாக்கள் ஒளிந்திருக்கும். இதைச் சொல்வதால் அறிவியல் கண்டுபிடிப்பு தான் சோம்பேறி சொத்தாக இருக்கவேண்டும் என்றில்லை. உங்கள் ஆபீசில் தூசி தட்டி தேடுங்கள். பழைய விற்பனை குறிப்புகள், என்றோ செய்த ஆய்வு அறிக்கைகள், வாடிக்கையாளரை புரிந்துகொள்ள எந்த காலத்திலோ செய்த மார்க்கெட் ரிசர்ச் ரிப்போர்ட், ஏதோ ஒரு கம்பெனியோடு எப்பொழுதோ செய்துகொண்ட ஒப்பந்தம், முழுவது மாய் பயன்படுத்தாமல் கிடக்கும் ஆபீஸ் அறைகள் என்று வருவாய் ஈட்டித் தரக்கூடிய ஏதோ ஒரு சொத்து சோம்பேறித்தனமாக தூங்கிக் கொண் டிருக்கும். அதைத் தட்டி எழுப்பி, குளிப்பாட்டி ஆகவேண்டியதை செய் யுங்கள். சரியாய் செய்தால் அதன் விற்பனை எகிறி பின்னங்கால் பிடறி யில் பட உங்கள் தொழில் பறக்கும்.
பணம் பண்ண மட்டும்தான் சோம் பேறி சொத்துக்கள் பயன்படவேண்டும் என்று அவசியமில்லை. ஐரோப்பிய நாடுகளுக்கு வேலை நிமித்தமாக வரு பவர்கள் அங்கு தங்கள் மீட்டிங்கு களை வைத்துக்கொள்ள பிசினஸ் சென்டர்களை வாடகைக்கு எடுப்பார் கள். இதனால் அவர்களுக்கு கூடுதல் செலவு என்பதை உணர்ந்த ‘சிட்டிபாங்க்’ மற்ற நாடுகளிலிருந்து ஐரோப்பா வரும் தங்கள் பிசினஸ் கஸ்டமர்களுக்கு தன் ஆபீஸ் கான்ஃபரென்ஸ் அறைகளை இலவசமாய் வழங்கி பயன்படுத்தச் சொல்கிறது. விஸ்தாரமான வசதி, வாடகை செலவு இல்லை என்பதால் சிட்டிபாங்க் கஸ்டமர்கள் மகிழ்ச்சி அடைவதோடு பாங்கைப் பற்றி நல்லவிதமாக நாலு பேரிடம் கூறவும் வைக்கிறது. சும்மா கிடக்கும் ஆபீஸ் ரூம் சங்கை ஊதுவதால் எத்தனை மகிழ்ச்சி சத்தம் பாருங்கள்!
ஆயுத பூஜைக்கு முன் தினம் மட்டும் அலுவலகத்தை துடைத்து சுத்தம் செய்யாமல் அடிக்கடி உங்கள் தொழிலை பிரித்து மேய்ந்து தேடுங்கள். சோம்பேறித்தனம் இல்லாமல் சுறுசுறுப் பாய் தேடுங்கள். தேடிய மாத்திரம் லேசில் தெரியாது. தீவிரமாக முயன் றால் வருவாய் ஈட்டித் தரும் திறனுள்ள சோம்பேறி சொத்துக்கள் கண்ணில் கண்டிப்பாய்படும். கொஞ்சம் வித்தியாச மாக சிந்தியுங்கள். கிரியேட்டிவாக தேடினால் புதைந்திருக்கும் புதையல் கண்ணில் படும். பட்டே தீரும்.
சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பியிருந்த மதுரை நண்பரை சந்திக்க அவர் அலுவலகம் சென்றிருந்தேன். டிம்பர் தொழிற்சாலை, கோடவுன், அலுவலகம் என்று பரந்து விரிந்திருக்கும் அவர் வளாகம் அளவு குறைந்திருந்ததைக் கண்டு விசாரித்தேன். ‘எல்லாம் நான் பயணித்த ‘எமிரேட்ஸ்’ விமானம் கற்றுக்கொடுத்த பாடம்’ என்று விளக்கினார்.
‘முப்பது மணி நேர அமெரிக்க பயணம். நானூறு பேர் பயணிக்கும் விமானம். ஆனால் அனைவருக்கும் கேட்ட பானம் சில்லென்று தரப்படு கிறது. விரும்பிய உணவு சூடாக பரி மாறப்படுகிறது. அவசரத்திற்கு மருந்து மாத்திரை முதல் சௌகரியத்திற்கு பெட்ஷீட் போர்வை வரை சகலமும் சப்ஜாடாக கேட்டது கேட்ட மாத்திரம் தரப்படுவதைப் பார்த்து ஆச்சரியப் பட்டேன்.’
`எத்தனை பெரிய ப்ளேன் என்றா லும் இத்தனை சாமான்களை எங்கு, எப்படி வைத்திருப்பார்கள் என்ற ஆச்சரி யம். பணிப்பெண்ணை கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே அழைத்துச் சென்று அவர்கள் அடுக்கி வைத் திருக்கும் பாங்கை காட்டினார். அசந்து போனேன். என் வீட்டு பீரோ சைஸ் இருக்கும் இடத்தில் அனைத்தையும் நேர்த்தியாக வைத்திருப்பதைப் பார்த்த போது என் பிசினஸ் வளாகத்தை நான் வைத்திருந்த கண்றாவி நினைவிற்கு வந்தது.’
மதுரை திரும்பியவுடன் முதல் வேலையாக வளாகத்தை சீர்படுத்தி பாக்ட்ரியை நேர்படுத்தினேன். பல காலம் குப்பையாய் கிடந்த பொருள் களை தூக்கி எறிந்தேன். கோடவுனில் சாமான்களை சிக்கனமாக அடுக்கி னேன். முடித்து பார்த்தால் வளாகம் பாதிக்கு மேல் காலியாய் இருந்தது. அந்த இடத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விட்டேன். தொழிலில் சம்பாதிக்கும் லாபத்திற்கு இணையாக வாடகை வர பிசினஸ் கடனில் பாதியை அடைத்துவிட்டேன்’ என்றார்.
அவருக்கு சோம்பேறி சொத்து கோட்பாட்டை விரிவாய் விளக்கினேன். அவர் செய்தது சாட்சாத் அதைத் தான் என்று கூறினேன்.
அவர் சிரித்துகொண்டே ‘அண்ணே, நாம வேணா சோம்பேறியா இருக்க லாம், நம்ம சொத்தும் எதுக்கு சோம் பேறியா இருக்கணும்’ என்றார்.