தொழில் வளம் தரும் இந்தியத் திருமணங்கள்!
திருமணம் என்கிற நிகழ்வுக்குத்தான் எவ்வளவு முக்கியத்துவம் இந்தியாவில். பிற நாடுகளிடமிருந்து இந்தியாவை தனித்துக் காட்டுவது நமது கலாசாரம்தான் என்கிற நம்பிக்கைகளில் முக்கியமான ஒரு புள்ளியாகவும் திருமணத்தைப் பார்க்கிறோம். திருமணத்தின் மூலமான குடும்ப அமைப்பு என்பது இங்கு வலுவாக உள்ளதுதான் இந்த நம்பிக்கைக்கு அடிப்படையான காரணமாக உள்ளது. முக்கியமாக இந்தியாவின் பெரும்பான்மையான மக்களிடத்தில் திருமண சடங்கு தெய்வீக தன்மை கொண்டது என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது. அதாவது சமூகம் திருமண சடங்குகளை புனிதமாக்கி வைத்துள்ளன.
குறிப்பிட்ட மதம், அல்லது இனத்தில்தான் என்றில்லை; பிராந்தியம், மொழி, எல்லைகளைக் கடந்து இந்தியா முழுவதிலுமே இப்படியான ஒரு புனித தன்மை திருமண நிகழ்வின் மீது ஏற்றப்பட்டுள்ளது. அதே சமயத்தில் திருமண சடங்கு கொண்டாட்டதுக்குரியதாகவும் இருந்து வருகிறது. ஆனால் இதன் இன்னொரு பக்கமோ பல ஆயிரம் கோடி வர்த்தக புழக்கம் கொண்ட மிகப் பெரிய சந்தை என்பதையும் யாரும் மறுக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளிப்படையான தன்மை இல்லாத இந்த திருமண சந்தை தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் தனது கலாச்சார தன்மைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு மிகப் பெரிய பிசினஸ் நெட்வொர்க்காக விரிவடைந்து கொண்டிருக்கிறது.
கொண்டாட்ட நிகழ்வு
சாதாரணமாக முன்பெல்லாம் ஒரு திருமணம் உறுதி செய்யப்பட்டால் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி தம்பதிகள் வாழ்க்கையை தொடங்குவது வரை ஒவ்வொன்றுக்கும் மண வீட்டாரே முன்நின்று வேலை செய்வார்கள். உறவுகளுக்கு சொல்வது தொடங்கி, உபசரிப்பில் மகிழ்வது முதல் அனைத்து ஏற்பாடுகளும் மிக பரபரப்பாக அந்த குடும்பத்தையே மாற்றிவிடும். இது எத்தனை ஆண்டுகளானாளும் மறக்க முடியாத நிகழ்வாக மாறும் தன்மை கொண்டவை என்றால் மிகையில்லை. அதே நேரத்தில் திருமணம் முடித்து பிறகு அவ்வளவு ஆசுவாசமாக இருக்கும். அந்த கொண்டாட்டத்துக்கு பின்னால் பொருளாதார செலவுகள் மட்டுமல்ல, மண வீட்டின் கடுமையான உழைப்பும் கலந்தே இருக்கும்.
ஆம்.. இந்திய திருமணங்கள் பெரும் பொருட்செலவும், கடும் உழைப்பும் கொண்டவை. தவிர மிக நீண்ட கால திட்டமிடலுடன் இணைந் திருக்கிறது. சாதாரணமான தகுதி நிலைக்கு ஏற்ப இந்தியாவில் ஒரு திருமணத்துக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை செலவிடப்படுகின்றன. சுமார் மூன்று மாதம் முதல் ஒரு ஆண்டு வரையிலும் திருமண திட்டமிடல் நீள்கிறது.
இவற்றின் பின்புலமாக திருமணத்தை பார்க்கிறோம் என்றால் மிகப் பெரிய தொழில் வாய்ப்புகளையும், பணப் புழக்கத்தையும் இந்திய திருமணங்கள் கொண்டிருக்கின்றன என்கிற உண்மை விளங்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தோராயமாக 1 கோடி திருமணங்கள் நடக்கின்றன. ஒப்பீட்டளவில் ஆண்டுக்காண்டு திருமண செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனடிப்படையில் பார்த்தால் தற்போது இந்திய திருமண சந்தை சுமார் 2,00,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பை கொண்டுள்ளது. இது ஆண்டுக்காண்டு இது 30 சதவீதம் வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் ஒருவர் தன் வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கு வருமானத்தை திருமணத்துக்காக செலவு செய்கிறார் என்கின்றன புள்ளி விவரங்கள்.
சமீப காலங்களில் மெல்ல உருவான திருமண திட்டமிடல் என்கிற துறை இன்று திருமணத்தின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிப்பதாக வளர்ந்து நிற்கிறது. கடந்த காலங்களில் ஆபரணம், ஆடைகள், உணவு என்பது மட்டும்தான் மிகப் பெரிய செலவுகளாக இருந்தன. ஆனால் இன்று மணமகன் அல்லது மணமகளை தேடுவதற்குகூட பல ஆயிரங்கள் செலவிட வேண்டும். இணையதளம் மூலம் தேடத் தொடங்கி இன்று செயலிகள் மூலம் மண உறவுகள் அமையத் தொடங்கியிருக்கின்றன. இப்போது மணமக்களை ஹனிமூன் அனுப்புவது வரை அனைத்தையும் ஒரே நிறுவனமே செய்து கொடுத்து விடுகிறது. திருமணத்துக்கு முன்னரான பேச்சிலர் பார்ட்டிகளைக் கூட ஒருங்கிணைத்து கொடுக்கும் அளவுக்கு சேவைகள் விரிவடைந்து வருகின்றன.
எல்லாம் பிசினஸ்
முன்பு திருமண ஏற்பாட்டின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் தனித்தனியாக ஆட்களைத் தேடி அலையவேண்டியிருக்கும். ஆனால் இப்போது திருமணம் சார்ந்த அனைத்தையும் இந்த திட்டமிடல் நிறுவனங்களே முடித்து கொடுத்து விடுவதால் திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்கிற பழமொழி எல்லாம் செல்லுபடியாவதில்லை. இன்று திருமணம் என்பது கோடிகளில் புழங்கும் தொழிலாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. திருமண அழைப்பிதழ் சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, மேக்கப் மற்றும் அலங்கார சந்தை ரூ.10 ஆயிரம் கோடி, அணிகலங்கள் சந்தை ரூ.10 கோடி, ஆபரண சந்தை ரூ.1 லட்சம் கோடி என தனித் தனியான சந்தை மதிப்பு கொண்டுள்ளன. உணவுக்கு கூட ஒரு இலைக்கு இவ்வளவு தொகை என்றுதான் குறிப்பிடப்படுகின்றன.
முறைப்படுத்தப்பட்ட தொழில்
ஒவ்வொரு திருமண சீசனிலும் 3 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இதன் வளர்ச்சி ஆண்டுக்காண்டு 25-35 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு திருமணத்துக்கு சாராசரியாக 30 முதல் 40 கிராம் ஆபரணம் நகை பயன்படுத்துகிறார்கள் என்றால் ஒரு ஆண்டில் நடக்கும் 1 கோடி திருமணத்துக்கு ஆண்டுக்கு 300 முதல் 400 டன் தங்கம் தேவையாக இருக்கிறது. தவிர கேட்டரிங், புகைப்படம், திருமண மண்டபம் என ஒவ்வொன்றும் பல ஆயிரம் கோடி சந்தையை கொண்டிருக்கின்றன. முன்பு தனி நபர்களை நம்பி இருந்த இந்த ஏற்பாடுகள் இன்று நிறுவனங்கள் கையில் சென்றுள்ளதால் முறைப்படுத்தப்பட்ட தொழிலாகவும் பரிணாமம் எடுத்துள்ளது.
ரசனை மாற்றம்
இது போன்ற திட்டமிட்ட திருமணங்களால் ஒரு கார்ப்பரேட் தன்மை உருவாகிவிட்டது. இது புதுமையாக இருப்பதால் மக்கள் விரும்புகின்றனர். இதனால் மணவீட்டாருக்கு மிகுதியான நேரம் கிடைக்கிறது. கடுமையாக உழைத்து திட்டமிடத் தேவையில்லை.
இதனால் உறவுகளைக் கவனிக்க முடிகிறது. இப்போது ‘தீம்’ திருமணங்கள் அதிகரித்து வருவதால் புதிய வடிவத்தில் திருமணத்தை திருப்திகரமாக நடத்திய உணர்வு கிடைத்து விடுகிறது. அதாவது மன்னர் கால அமைப்பில் திருமணம் நடக்க வேண்டும் என்று விரும்பினால், உணவு, உடை, அலங்காரம் முதற்கொண்டு அதை உருவாக்கி விடுகின்றன நிறுவனங்கள். இதனால் மணவீட்டார்களுக்கு அலைச்சல் இல்லாமல் எதிர்பார்த்தபடி திருமணத்தை நடத்த முடிகிறது என்கின்றனர்.
இது திருமணம் என்கிற கலாச்சார நிகழ்வில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது கிடைக்கும் பலன் என்கின்றனர் இந்த துறை சார்ந்தவர்கள். இன்னும் சொல்லப்போனால் இப்போது திருமணத்துக்கு திட்டமிடும் பல குடும்பங்கள் இப்போது என்ன டிரெண்ட் என்று ஆன்லைனில் தேடிய பிறகுதான் திருமண தேதியையே முடிவு செய்கின்றனர் என் கிறார்கள்.
கால மாற்றத்தில் எல்லாம் மாறிக் கொண்டிருக்கிறது. திருமணம் எப்படி நடக்கிறது என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனென்றால் அது ஈவன்டாக மாறி ரொம்ப நாளாகி விட்டது.