ஏணியும், பாம்பும் வரைந்த பரமபத விளையாட்டை நாம் விளையாடுகிறோம். பாம்புக்கட்ட விளையாட்டு என்றும், இதைக் கூறுவோம். இந்த விளையாட்டிற்கு காரணமானவன் நகுடன். நகுடன் சந்திர வம்சத்து அரசன். இவனுக்கு இந்திர பதவி மீது கொள்ளை ஆசை. இந்திர பதவியை விட இந்திராணி மீது இன்னும் ஆசை. பிறன்மனை நோக்குபவர்களை பாரதம் கடுமையாகவே தண்டித்திருக்கிறது. ராமனின் மனைவி மீது ஆசைப்பட்ட ராவணன் அழிந்தான். இந்திரனும் அப்படிப்பட்டவனே. கவுதம முனிவரின் மனைவி அகல்யை மீது ஆசைப்பட்டதால் உடம்பெல்லாம் கண்களாகி, பாவ விமோசனம் பெற்றான். அவனால் அந்த அப்பாவி பெண்ணும், பலகாலம் கல்லாயிருந்து அவஸ்தைப்பட்டாள். இந்த பாவமெல்லாம் சும்மா விடுமா? தனக்கென ஒருத்தி இருக்கும்போது இன்னொருத்தி மீது ஆசைப்பட்ட இந்திரனுக்கும் சோதனை வந்தது. அவனது மனைவி இந்திராணியை அடைந்தே தீருவதென முடிவெடுத்தான் நகுடன். இந்திராணியை அடைய வேண்டுமானால் இந்திரனை அரச பதவியை விட்டு விரட்ட வேண்டும். அது சாமானியமான செயலா? இந்திரனின் சக்தியை ஒடுக்கி, அவனை விரட்ட எண்ணி தவவலிமை பெற கடும் தவத்தில் ஈடுபட்டான் நகுடன். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அவனது தவம் நீண்டது. பிரம்மன் அவனது தவத்தை மெச்சி, என்ன வரம் வேண்டும் என்றார். நகுடன் எனக்கு இந்திரலோகத்தின் தலைமைப் பதவி வேண்டும் என்றான். இந்திரன் அந்தப் பதவியில் இருக்கும் போது அதை எப்படி என்னால் தர இயலும்? என பிரம்மன் கேட்டதும், கொஞ்ச காலமாவது அந்தப் பதவியைத் தாருங்கள். அதை தக்க வைத்துக் கொள்வது என் பொறுப்பு என்றான் நகுடன். பிரம்மன் அப்படியே வரத்தைக் கொடுத்து விட்டார். ஒருவர் தலைமைப் பதவியில் இருக்கும் போது அவரைக் கவிழ்த்து விட்டு தலைமைப் பதவியை தெய்வமே இன்னொருவருக்கு தரலாமா? என்ற கேள்வி எழும். அதுதான் தண்டனை என்பது. சொல்லப் போனால் பிரம்மன் இந்த வரத்தைக் கொடுப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார் என்றே சொல்ல வேண்டும். ஏன் தெரியுமா? இந்திரனுக்கு தகுந்த பாடம் கற்பிப்பதற்காக, இதற்கு ஒரு காரணம் உண்டு.
ஒரு முறை இந்திரன் தனது அரசவையில் ரம்பை, திலோத்தமை, ஊர்வசி ஒன்று சேர ஆடிய நடனத்தை ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனது குருவான வியாழ பகவான் அரங்கிற்குள் நுழைந்தார். வந்தவரை இந்திரன் கவனிக்கவே இல்லை. அந்தப் பெண்களின் நடன அழகை மட்டுமின்றி, அவர்களையும் சேர்த்து ரசித்துக் கொண்டிருந்தான். கலைஞர்களை பொறுத்த வரை, அவர்களின் கலையழகை மட்டுமே ரசிக்க ஒருவனுக்கு உரிமை உண்டு. ஆனால், அவன் அவர்களையே ரசித்துக் கொண்டிருந்தான். வந்த குருபகவான் கோபமடைந்தார். ஆசிரியரான தன்னை வணங்கி வரவேற்கவோ, அமரச் சொல்லவோ கூட இல்லாத நிலையில் மோகத்தில் மூழ்கிக் கிடந்த இந்திரனை ஒரு முரட்டு பார்வை பார்த்து விட்டு, புறப்பட்டு விட்டார். குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். ஆனால் குருவின் பார்வையைப் பெற தவறிவிட்ட ஒருவனின் நிலை என்னாகும் தெரியுமா? குரு வெளியே செல்லவும், சனீஸ்வரன் உள்ளே வந்தார். அவர் தேடிப்போய் அல்லவா யாரையும் பிடிப்பார்? இந்திர லோகத்திற்கு சென்ற சனிபகவான், இன்பத்தில் லயித்துக் கிடந்த இந்திரனை நீண்டநேரமாக பார்த்துக் கொண்டிருந்தார். புறப்பட தயாரானார். அப்போது இந்திரன் தற்செயலாக அவரை கவனித்து விட்டான். சனீஸ்வரரே! அதற்கு புறப்பட்டு விட்டீர்களா? அமருங்கள். இன்னும் நிகழ்ச்சி இருக்கிறது. பார்த்து விட்டு செல்லுங்கள் என்றான். இதைத் தான் போகிற சனியை பிடித்துக் கட்டுவது என்பார்கள். கெட்ட நேரம் யாரை விட்டது? அதிலும் காமாந்தகாரனான இந்திரனை நியாயஸ்தரான சனிபகவான் விடுவாரா என்ன? இனியும் நான் இங்கிருந்தால் சமயத்தில் எனக்கே ஆபத்தாய் போய்விடும். எனக்கு இன்னும் சிலரை பார்க்க வேண்டிய வேலை இருக்கிறது என்றவர் நேராக நகுடனின் இருப்பிடத்திற்கு சென்றார். தவவலிமை பெற்று, இந்திர பதவியை பெற காத்திருந்த அவனை அறியாமலே அவனைப் பார்த்தார்.
நகுடனுக்கு பொங்கு சனி காலம். சனியின் பார்வையால் இந்திரலோகமே அவனுக்கு அடிமைப்பட இருந்த நல்ல நேரம். அவன் இந்திர சபையை நோக்கி, பல காலமாக தன் தேரில் பயணித்தான். அதை அடைவது என்றால் எளிதான காரியமா? இதற்குள் குருபகவானின் அனுக்கிரகம் இல்லாததால், தேவர்கள் அனைவரும் யாகங்கள், பூஜைகளை மறந்து இன்பத்தில் மூழ்கி விட்டனர். இந்திரனே இன்பத்தில் திளைத்து கிடக்கும் போது, அவனது தொண்டர்களான நாமும் ஏன் பெண்களை ரசிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்கள் இருந்தனர். தேவலோகத்தில் அனைத்து யாகங்களும் நின்று போயின. இதனால் இந்திரனின் சக்தி குறைந்தது. அவன் யாகங்களை தொடர விரும்பி, புதிய ஆசிரியர் ஒருவரைத் தேடிச் சென்றான். படைப்புக் கடவுளான பிரம்மனிடம் சென்று, யாகங்களை நிறைவேற்ற புதிய ஆசிரியர் ஒருவரை தரும்படி கேட்டான். இந்திரனுக்கு பாடம் கற்பிக்க விரும்பிய பிரம்மா, அசுரர்களின் குருக்களில் ஒருவரான விஸ்வரூபன் என்பவரை அனுப்பி வைத்தார். விஸ்வரூபன் யாகத்தை தொடங்கினார். அவர் இந்திரன் அறியாமலேயே யாகத்தை அசுரர்களுக்கு சாதகமான வழியில் நடத்தினார். இதை தேவர்கள் மூலம் கேள்விப்பட்ட இந்திரன், அவரை வெட்டி கொன்றான். அவரைக் கொன்ற பாவம் இந்திரனைப் பிடித்துக் கொண்டது. இதனால் இந்திரனின் பதவி இன்னும் ஆட்டம் கண்டது. இந்த நேரத்தில் இறந்து போன விஸ்வரூபனின் தந்தையான துவட்டா என்பவர், இந்திரனை பழிவாங்க எண்ணம் கொண்டு, விருத்திராசூரன் என்பவனை உருவாக்கி அனுப்பினார். அவன் இந்திரனை ஓட ஓட விரட்டினான். இந்திரலோகத்தையும், மனைவியையும், செல்வத்தையும் இழந்தான் இந்திரன். மறைந்து வாழும் நிலைமை அவனுக்கு ஏற்பட்டது.
இந்திர லோகத்திற்கு தகுதியான ஒரு தலைவனை தேடியலைந்த தேவர்கள், நகுடன் அதற்குரிய தகுதிகளைப் பெற்றிருப்பதை அறிந்து, அவனை தலைமை பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொண்டனர். மகிழ்ச்சி கொண்ட நகுடன் அதற்குரிய தகுதிகளைப் பெற்றிருப்பதை அறிந்து, அவனை தலைமை பொறுப்பேற்குமாறு கேட்டுக் கொண்டனர். மகிழ்ச்சி கொண்ட நகுடன் தலைமைப் பொறுப்பேற்க தயாரானான். இதைக் கேள்விப்பட்ட இந்திராணி, நகுடன் தன்னையும் நாசம் செய்யும் நோக்கில் வருகிறான் என்பதை அறிந்தாள். அவள் குரு பகவானிடம் தன்னைக் காப்பாற்ற முறையிட்டாள். குருபகவான் அவளை தைரியமாக இருக்கச் சொல்லி விட்டு, ஏழு முனிவர்கள் ஒன்று சேர்ந்து தூக்கி வரும் பல்லக்கில் அவனை அழைத்து வரச்சொல் என்றார். இந்திராணியும் அப்படியே செய்தாள். ராணியே தன்னை அழைத்து வரச்சொல்லி இருக்கிறாள் என்பதால் ஆனந்தப்பட்ட நகுடன், கெட்ட நோக்கத்துடன் பல்லக்கில் ஏறினான். அந்தப் பல்லக்கை தூக்கிய முனிவர்களில் அகத்தியரும் ஒருவர். அவர்கள் மெதுவாக பல்லக்கை தூக்கி வந்தனர். நகுடன் இந்திராணியை பார்க்கும் ஆசையில் இப்படி மெதுவாக செல்கிறார்களே! சர்ப்ப என்றான். சர்ப்ப என்றால் விரைவு என்றும் பொருள். பாம்பு என்றும் பொருள். உடனே அகத்தியர் உன் விருப்பம் போல் உன்னை பாம்பாக்குகிறேன் என்றார். சொர்க்கத்தின் ஏணிப்படிகளில் தன் வலிமையால் ஏற வேண்டியவன், பாம்பாய் மாறி பூமியில் விழுந்தான். பாம்பு பிறவியாய் அலைந்தான். எவ்வளவு தவம் செய்தாலும் ஒழுக்கம் தவறியதால் தவவலிமையை முழுமையாக இழந்தான். டதன் பிறகு இந்திரன் பல தலங்களை அடைந்து, செய்த தவறை உணர்ந்து, இறைவனை பல தலங்களுக்கும் சென்று வணங்கி, பாவம் நீங்கி தன் பதவியையும் இந்திராணியையும் அடைந்தான்.