சிதம்பரம் அருகே விபத்தில் சிக்கியவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1, 27 ,500 ரொக்கம் மற்றும் நகைகளை ஒப்படைத்த 108 வாகன தொழிலாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 59). இவர் சிதம்பரத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கடலூர் மாவட்டம் பெரியப்பட்டு பகுதி அருகே சென்று கொண்டிருந்த இவர் திடீரென சாலையில் சறுக்கி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அவர் மயக்கமடைந்தார்.
இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் சம்பவம் குறித்து 108 வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து அங்கு வந்த புதுசத்திரம் 108 வாகனம் விபத்தில் சிக்கிய சுப்பிரமணியனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதனிடையே அவர் வைத்திருந்த ரொக்கம் ரூபாய் 1,27,500 மற்றும் அவர் அணிந்திருந்த தங்க மோதிரம், கைசங்கலி உள்ளிட்ட நகைகளை பாதுகாப்பாக மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியன் மனைவிக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்து அவர் வைத்திருந்த பணம் மற்றும் அவரது நகைகளை ஒப்படைத்துள்ளனர்.
விபத்தில் சிக்கியவரிடம் கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் நகைகளை நேர்மையாக அவரது மனைவியிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களான அவசரகால மருத்துவ நிபுணர் கல்பனா மற்றும் ஓட்டுநர் கனகராஜ் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.