“நம்ம பிள்ளைகளாவது ஆரோக்கியமா வளரட்டுமே!” – ஆர்கானிக் பிசினஸில் அசத்தும் மேனகா
சிறுதானியம், இயற்கை உணவுப் பொருள்கள் மேல் அதிக ஈடுபாடு கொண்டவர் என் கணவர் திலகராஜன். அடிக்கடி இயற்கை விவசாயிகளைச் சந்திக்கிறது, இயற்கை சார்ந்த விஷயங்களை அப்டேட் செய்றதுன்னு இருப்பார். தான் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களை எனக்கும் சொல்வார். அப்படியே எனக்கும் சிறுதானியங்கள், ஆர்கானிக் உணவுகள் மேல அளவில்லாத ஆர்வம் வந்துடுச்சு. அதை எல்லாம் உணவு முறையில கடைப்பிடிக்க ஆரம்பிச்சேன். இயற்கை உணவுப் பொருள்கள் மேல எங்க ரெண்டு பேருக்கும் இருந்த ஆர்வமே, இப்போ மதிப்புக்கூட்டப்பட்ட இயற்கை உணவுப் பொருள்கள் பிசினஸ் செய்யக் காரணம்’’ என உற்சாகமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த மேனகா.
“கல்யாணமான ஒரு வருஷத்துலயே, ஐ.டி வேலையில இருந்த என் கணவர் வேலையை விட்டுட்டு இயற்கை உணவுப் பொருள்கள் பிசினஸை நோக்கிப் பயணிக்க ஆரம்பிச்சார். நான் ஐ.டி வேலைக்குப் போயிட்டு இருந்தேன். அப்போ ஓர் ஆர்வத்துல எங்க உணவுமுறையைப் பாரம்பர்ய நெல் ரகங்களை நோக்கித் திருப்ப, அது நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்துச்சு. குறிப்பாக, நான் சாப்பிட்டு வந்த பூங்கார், கொட்டாரம் சம்பா, நீலஞ்சம்பா உள்ளிட்ட பாரம்பர்ய அரிசி ரகங்கள் என்னோட சுகப்பிரசவத்துக்கே கைகொடுத்துச்சு. தாய்ப்பால் சுரப்பும் அதிகமாச்சு. சில நாள்கள் தாய்ப்பால் வங்கிக்கு பால் டொனேட் செய்ற அளவுக்குக்கூட கிடைச்சுச்சு.
எனக்கு தைராய்டு பிரச்னை இருந்ததால, இயற்கை ஆர்வலர்களின் ஆலோசனைப்படி குள்ளக்கார், காட்டு யானம், கருங்குறுவை போன்ற பாரம்பர்ய அரிசி ரகங்களைச் சாப்பிட்டேன். நல்ல பலன் கிடைச்சது. ‘பாரம்பர்ய அரிசி, சிறுதானியங்கள், காய்கறிகளைப் பயன்படுத்தினாலே நோய்களின் வரவைக் கட்டுப்படுத்த முடியுதே… ஆனா, இதைப்பத்தின விழிப்பு உணர்வு குறைவா இருக்கே’னு யோசிச்சேன். அதனால, அசிஸ்டென்ட் மேனேஜர் வேலையை விட்டுட்டு, `கேவிகே பயிற்சி மைய’த்துல இயற்கை விளைபொருள்கள் மதிப்புக்கூட்டல் மற்றும் பிசினஸ் பயிற்சிகளை எடுத்துக்கிட்டேன். தொடர்ந்து கணவர்கூட சேர்ந்து இயற்கை உணவுப் பொருள்கள் பிசினஸை ஆரம்பிச்சேன்’’ என்று இந்தத் தொழிலுக்கு வந்த கதை சொன்ன மேனகா, ‘மண் வாசனை’ என்கிற தன் இயற்கை விளைபொருள்கள் அங்காடி பற்றியும் பேசினார்.
‘`பொதுவா பாரம்பர்ய அரிசி வகைகளை சில மணிநேரம் ஊறவெச்சு சாதம் செஞ்சாதான் நல்லா இருக்கும். இன்றைய அவசர உலகத்துல அதுக்கெல்லாம் சாத்தியம் குறைவு. அதோடு, இயற்கை உணவுப் பொருள்களோட விலையும் அதிகம். இதனாலேயே, அவற்றுக்கும் மக்களுக்குமான இடைவெளி அதிகமா இருக்கு. அதோடு, விவசாயிகளுக்கும் அவங்க உழைப்புக்கு ஏத்த வருமானம் கிடைக்கறதில்லை. எங்களுக்குத் தெரிஞ்ச இயற்கை விவசாயிகள் நிறைய பேர் விவசாயம் செய்யவே பின்வாங்க ஆரம்பிச்சாங்க. அந்த விவசாயிகளைச் சந்திச்சு, ‘நீங்க தொடர்ந்து இயற்கை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யுங்க. உங்களுக்குக் கட்டுப்படியாகிற விலையைக் கொடுத்து நாங்க விளைபொருள்களை வாங்கிக்கிறோம்’னு சொல்லி உற்சாகப்படுத்தினோம்.
விவசாயிகள்கிட்ட நேரடியா பாரம்பர்ய அரிசி மற்றும் தானியங்களை வாங்கி, ஊறவெச்சு மாவா அரைச்சும், கூழ் மிக்ஸ், பொடி வகைகள், மசாலாப் பொருள்கள், வடகம், ஊறுகாய், செக்கில் ஆட்டிய எண்ணெய் உள்ளிட்ட பொருள்களா மதிப்புக்கூட்டி தயாரிச்சும் விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். படிப்படியா பிசினஸ் முன்னேற்றம் அடைஞ்சுது. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச எங்களோட ‘மண் வாசனை’ அங்காடி, ஒரு தொழில் என்பதைத் தாண்டி, இயற்கை உணவுப் பொருள்களை நோக்கி மக்களைத் திருப்பும் வகையில் ஒரு நம்பிக்கை திசையா இருப்பதில் மகிழ்ச்சி’’ என்கிறார் மேனகா உற்சாகத்துடன்.
‘`எங்க பையன், பொண்ணு ரெண்டு பேருமே, பிறந்தது முதல் இயற்கை உணவுப் பொருள்களையே சாப்பிட்டு, ஆரோக்கியமானவங்களா வளர்ந்துட்டு வர்றது எங்களுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. நம்ம பிள்ளைங்களை போல, இந்தத் தலைமுறையினர் அனைவரும் இயற்கை உணவுப் பொருள்களை உட்கொண்டு நோய்நொடி இல்லாம வளரணும்னு நானும் கணவரும் நினைச்சோம். அதனால தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்குப் போய் மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளைச் செய்ய ஆரம்பிச்சோம். ‘இப்போதான் பருவமழை போன்ற பல பிரச்னைகளால விவசாயம் சரிவர நடக்காம இருக்கு. ஆனா, நம்ம முன்னோர் சீதோஷ்ண நிலை, நோய்களின் வரவைத் தடுக்கன்னு தேவைக்கு ஏத்தமாதிரி பாரம்பர்ய நெல் ரகங்களை பயிரிட்டாங்க. அதன்படி உடல்வலிமையைக் கூட்ட கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா ரகங்கள்; நீரிழிவைக் கட்டுப்படுத்த காட்டுயானம் ரகம்; நினைவாற்றலை அதிகப்படுத்த காலா நாமக் ரகம்; சுகப்பிரசவம் ஏற்பட பூங்கார் ரகம்; எடையைக் கட்டுப்படுத்த குள்ளக்கார் ரகம்… இப்படி ஒவ்வொரு தேவைக்கும் ஏற்ற நெல் ரகங்களைப் பயிரிட்டு ஆரோக்கியமா வாழ்ந்தாங்க. மழை பொய்க்கும்போது குழியடிச்சான் ரகம் நடவு செஞ்சு, வறட்சிக் காலத்துலயும் நிறைவா விவசாயம் செஞ்சாங்க’னு சொல்றதைக் கேட்டு, இளம் தலைமுறையினர் பலர் தங்களோட வீட்டுக்கு அந்த உணவுகளை எடுத்துச் சென்றது ஆக்கபூர்வமான, ஆனந்தமான தொடக்கம்’’ என்று சொல்லும் மேனகா, இரண்டு ஆண்டுகளாகச் சென்னையில் பாரம்பர்ய அரிசி ரகங்களின் கண்காட்சியையும் நடத்தி வருகிறார்.
“இந்த அவசர உலகத்துல வேலைப்பளுவால எல்லோருமே ஓடிக்கிட்டே இருக்கிறோம். அந்த ஓட்டத்துல சரியான உணவு, தூக்கம் இல்லாம, 40 வயசுலயே பல நோய்களுக்கும் ஆட்படு றோம். அப்புறம் சம்பாதிச்சதை எல்லாம் மருத்துவத்துக்கே செலவழிக்கிறோம். அழகான வாழ்க்கையை ரசிக்காம, பயத்தோடவே கழிக்கிறது எந்த வகையில நியாயம்?
பெற்றோரான நாம இதுவரை ரசாயன உணவுகளைச் சாப்பிட்டு நம்ம உடல்நலத்தைக் கெடுத்துக்கிட்டது போதும். இனி நம்ம பிள்ளைகளையாவது ஆரோக்கியமானவங்களா வளர்க்கலாமே! அதுக்கு இயற்கை உணவுப் பொருள்களோட பயன்பாடுகளைத் தெரிஞ்சுகிட்டு, ‘உணவே மருந்து’ என நம்ம உணவியல் முறையை இயற்கையை நோக்கித் திருப்பினால் போதும். நம்ம ஆரோக்கியம் கூடுவதோடு, இயற்கை உணவுப் பொருள்களின் விளைச்சல் அதிகமாகி, அவற்றின் விலையும் கணிசமா குறையும்” என்கிறார் அக்கறையும் நம்பிக்கையுமாக.
விழிப்பு உணர்வு பெருகட்டும்!