நளினியின் ஒருமாத கால பரோல் மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி.

nalini
தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள அனுமதிக்கும்படியும் அதனால் தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரியும் நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று வரும் நளினி கடந்த 22ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நளினி சென்னை ஐகோர்ட்டில் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தான் ஆயுள் சிறை தண்டனைக் கைதியாக 22 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதாகவும், தன்னுடைய 90 வயதான தந்தை பி.சங்கர நாராயணன் திருநெல்வேலி மாவட்டம், அம்பலவானபுரத்தில் படுத்த படுக்கையாக, மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தனக்கு தகவல் வந்துள்ளதால் அவரது இறுதிக் காலத்தில் சிலநாள் அவருடன்  இருப்பதற்கு ஆசைப்படுவதாகவும் கூறி தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணை நடந்தது. நளினியை பரோலில் அனுப்ப போலீஸார் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் வெளியே சென்றால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் கூறினர்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் வந்தது. நளினி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பரோல் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.  இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Reply