நாஞ்சில் சம்பத் தலைமறைவா? கைது நடவடிக்கை எப்போது?
பாரத பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர்கள் குறித்து அவமரியாதையாக பேசியதாக தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் மீது பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக தினமும் தினகரனை புகழ்ந்தும், ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோர்களை திட்டியும் தினமும் பேட்டி கொடுத்து கொண்டிருந்த நாஞ்சில் தற்போது திடீரென சில நாட்களாக தலைமறைவாகியுள்ளதாக கூரப்படுகிறது.
இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலிசார் கூறுகையில், ‘பி.ஜே.பி கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் நாஞ்சில் சம்பத் மீது புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர் எங்கே போய் விடப் போகிறார்? புகார் கொடுத்த அன்று அவரை விசாரித்தோம். இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளது. அவர் தலைமறைவாகிவிட்டார் என்று சொல்ல முடியாது. அவர் எங்கே போக முடியும்? அடுத்தக்கட்ட விசாரணையை பொறுத்தே, அவரைக் கைது செய்வது குறித்து முடிவு செய்வோம்” என்று கூறினர்
ஆனால் நாஞ்சில் சம்பத் உதவியாளர் இதுகுறித்து கூறியபோது, ‘அவர் தலைமறைவாகவில்லை. இந்த விவகாரத்தை சட்டரீதியாக அவர் எதிர் கொண்டுவருகிறார். அவர் யாருக்கும் அஞ்சாதவர். அப்படிப்பட்டவர் ஏன் தலைமறைவாக இருக்கப் போகிறார். இங்குதான் உள்ளார். எப்போது சிங்கம் பேச வேண்டுமோ அப்போது பேசும். அவர் தலைமறைவாக உள்ளார் என்று வருகின்ற தகவல் உண்மையில்லை” என்று உறுதியாக மறுத்துப் பேசினார்.