நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தத்துவத்தை எடுத்துரைக்கும் ஆலயங்களான கச்சி (அல்லது) ஆரூர், ஆனைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, தில்லை என்ற திருக்கோயில்கள் வரிசையில் திகழும் தில்லையம்பதியை- தில்லையம்பலத்தை சிதம்பரம் எனத் தொன்மையான நூல்கள் தெரிவிக்கின்றன.
சிதம்பரம் என்பது பிரபஞ்சப் பெருவெளியையும், சிதாகாசம் எனும் ஞானவெளியையும் குறிக்கிறது. அம்பலத்தில் ஆடுகிற வனாகக் காட்சியளிக்கும் நடேச மூர்த்தியின் திருவடிவத்தில் காணப்படும் கமல பீடமும் மகர வாயும், நிலம் எனும் பூதத்தையும்; பரமனின் சடையில் ஒடுங்கிக் கிடக்கும் கங்காதேவி, நீரையும்; பெருமானின் இட மேற்கரத்தில் திகழும் எரியகல் (தீச்சுடர்), நெருப்பையும்; கூத்தனின் விரிசடை, பறக்கும் காற்றின் வேகத்தையும்; தீச்சுடர்களோடு திகழும் பிரபை ஆகாசத்தையும் நம் முன் நிறுத்தும் குறியீடுகள்! இவை அனைத்தையும் நாம் ஒருங்கே தரிசிக்கக்கூடிய திருத்தலமான தில்லையம்பதியின் நான்கு திருக்கோபுரங்களையும் சிற்பசாகரம் என்றே சொல்லலாம்.
சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜன் காலத்தில் தில்லைப் பெருங்கோயில் எவ்வாறு திகழ்ந்தது என்பதை, தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஓவியக் காட்சியாகக் காட்டியுள்ளான். பொன்னம்பலமும் பிற கோயில்களும், திருச்சுற்றுமாளிகையும், திருக்கோபுரங்களும் அந்தக் காலகட்டத்தில் எவ்வாறு திகழ்ந்ததோ, அவ்வாறே அவ்வோவியப் படைப்பில் திகழ்வதை இன்றைக்கும் பார்க்கலாம்.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு, தில்லையில் இன்றைக்கு நாம் காணும் ஏழு நிலைக் கோபுரங்கள் இடம்பெறவில்லை. மாறாக திருச்சூர், இருஞ்சாலக்குடா போன்ற கேரளத்துக் கோயில்களில் இடம்பெறும் மரவேலைப்பாடுகளுடன் ஓடுகள் வேயப்பட்ட சேரர் காலப் பாணியில் அமைந்த கோபுரங்களே இடம் பெற்றிருந்தன.
தில்லையில் முதன்முதலாக ஏழு நிலைக் கோபுரமாக மேற்குக் கோபுரத்தை இரண்டாம் குலோத்துங்கச் சோழன் எடுப்பித்தான். பின்னர் கோப்பெருஞ்சிங்கன், கிழக்கு மற்றும் தெற்குக் கோபுரங்களைக் கட்டினான். ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் தெற்குக் கோபுரத்தைப் புதுப்பித்தான். விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் வடக்குக் கோபுரத்தை எடுத்தார்.
பல்வேறு காலகட்டங்களில், ஏழு நிலைகளைக் கொண்ட தில்லைக் கோபுரங்கள் கட்டப்பட்டிருந்தாலும், அந்தக் கோபுரங்களில் காலத்தால் முதற்படைப்பாக விளங்கும் மேற்குக் கோபுரத்தில் எவ்வாறு சிற்பங்களை இடம் பெறச் செய்தார்களோ, அதேமுறையை பிறகு அங்கு எடுக்கப்பட்ட மூன்று கோபுரங்களிலும் பின்பற்றினார்கள். ஆகவே, திட்டமிட்ட செயல்பாட்டுடன் கோயிலின் எல்லாக் கோபுரங்களும் ஒருசேர அழகு காட்டி நிற்பது இன்னும் பிரமிப்பைக் கூட்டுகிறது!
கோபுரங்களில் இடம்பெற்றுள்ள சிற்பங்களின் அமைப்பு முறையை, நான்கு பகுப்புகளில் அடக்கலாம். நுழைவாயிலின் இருமருங்கும் காணப்பெறும் மாடங்களில் உள்ள சிற்பங்கள், நுழைவாயிலின் இருமருங்கும் சுவரில் இடம் பெற்றுள்ள சிற்பங்கள், கோபுரங் களின் வெளிப்புறத்தில் அடித்தள மாக விளங்கும் உபபீடத்தில் உள்ள மாடங்களில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள், கோபுரத்தின் புறச் சுவரான பித்தியில் மேல்நிலை மாடங்களில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள் என நான்கு வகைகளாகப் பிரித்துப் பார்க்கலாம். வெளிப்புறம் காணப்படும் சிற்பங்கள், நான்கு திக்குகளிலும் தொடர்ச்சியாக அமைந்திருப்பதால், அவற்றை ஆவர்ண கோஷ்ட சிற்பங்கள் என கட்டடக் கலை நூல்கள் குறிப்பிடுகின்றன.
தில்லைக் கோபுரங்களைப் பொறுத்தவரை, நுழைவாயிலின் மாடங்களில் ஸ்ரீபைரவர், ஸ்ரீதுர்கை, அதிகார நந்தி, கோபுரங்களை எடுத்த கர்த்தா ஆகியோருக்கு மாடங்கள் அமைத்து, சிற்பங்களை இடம்பெறச் செய்துள்ளனர். மேற்குக் கோபுரத்தில் இரண்டாம் குலோத்துங்கனின் உருவச் சிலையும், கிழக்கில் கோப்பெருஞ்சிங்கனின் உருவச் சிலையும், வடக்கில் கிருஷ்ணதேவராயரின் உருவச் சிலையும் இருப்பதை இன்றைக்கும் காணலாம்.
இவற்றில், தெற்கில் இருந்த மன்னவனின் சிலையும், கிழக்குக் கோபுரத்தில் இருந்த பைரவர் சிலையும் பின்னாளில் காணாது போய்விட்டன. மாறாக, பிற சிற்பங்களை அங்கு இடம்பெறச் செய்துள்ளனர். மேற்குக் கோபுரத் தில் குலோத்துங்கன் அருகில் சேக்கிழார் பெருமானின் திருவுருவச் சிற்பம் இடம் பெற்றுள்ளது. கோபுரத்தை எடுத்த கர்த்தாவுக்கு எதிர்ப்புறம் அந்தக் கோபுரத்தை உருவாக்கிய சிற்பிகளின் உருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
கிழக்குக் கோபுரத்தை எடுத்த சிற்பிகளுக்கு அருகே, அவர்கள் கட்டுமானத்துக்காகப் பயன்படுத்திய அளவுகோலின் சிற்பமும் அதில் அளவுக்குறியீடுகளும்கூட சிற்பங் களாக வடிக்கப் பட்டு, பிரமிக்க வைக்கின்றன. வடக்குக் கோபுரத்தில் இடம்பெற்றுள்ள சிற்பிகளின் உருவச் சிற்பங்களுக்கு மேலாக விருத்தகிரி (விருத்தாசலம்) சேவகப்பெருமாள், சேவகப்பெருமாளின் மகன் விசுவமுத்து, அவன் தம்பி காரணாகாரி, திருப்பிறைக்கொடை ஆசாரி திருமருங்கன் என்ற அவர் களின் பெயர்கள் கல்வெட்டு வாசகங் களாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
தில்லைக் கோபுர நுழைவாயில்களில், இரண்டு பக்கச் சுவர்களிலும் நாட்டிய சாஸ்திரத்தை எடுத்துரைக் கும் புடைப்புச் சிற்பங்கள் காணப்பெறுகின்றன. மேற்குக் கோபுரத்தில், பரத சாஸ்திர ஸ்லோக கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கூடவே, ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் கீழாக அதற்குரிய நாட்டிய கரணத்தை ஓர் ஆடற்பெண் ஆடிக்காட்டும் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கு அருகில், குடமுழா போன்ற தாள இசைக் கருவிகளை இசைக்கும் கலைஞர்களின் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. மேற்குக் கோபுரத்தில் 108 நாட்டியக் காட்சிகளும், கிழக்குக் கோபுரத்தில் 96 காட்சிகளும், தெற்குக் கோபுரத்தில் 104 காட்சிகளும், வடக்குக் கோபுரத்தில் 108 காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
பரத முனி இயற்றிய நாட்டிய சாஸ்திரம் காலங்காலமாக இந்தக் கோபுரங்கள் வழியே கட்டிக் காக்கப் பட்டு வருகிறது. அத்துடன் அந்த நாட்டிய சாஸ்திரக் கலையைப் பயில்வோருக்கு இந்தக் கோபுரங்களே போதிக்கும் கல்விச் சாலையாகவும் திகழ்கின்றன என்பது வியப்பூட்டுகிற உண்மை!