நான் சிரித்தால்: திரைவிமர்சனம்
தாராளமாக சிரிக்கலாம்
மீசையமுறுக்கு மற்றும் நட்பேதுணை ஆகிய இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பின் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள மூன்றாவது படம் ’நான் சிரித்தால்’ இந்த படம் முந்தைய இரண்டு படங்களை போல் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை பார்ப்போம்
சிரிக்கும் நோயுடைய ஹீரோ தொலைந்துபோன தனது நண்பனை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக ரவுடியிடம் மாட்டிக்கொள்கிறார். அதுமட்டுமின்றி அந்த ரவுடியை அவர் போலீஸ் இடமும் எதிர்பாராதவிதமாக சிக்க வைக்கிறார். இதனால் ஹிப் ஹாப் தமிழா ஆதியை கொலை செய்ய வில்லன் முயற்சிப்பதும், அந்த வில்லனிடமிருந்து சிரிக்கும் நோயுடைய ஆதி எப்படி தப்பித்தார்? என்பதுதான் காமெடி கலந்த இந்த படத்தின் கதையாகும்
ஹிப் ஹாப் தமிழா ஆதி தனக்கு எது சரியாக வருமோ அந்த கேரக்டர்களை சரியாக தேர்வு செய்து பாதி வெற்றி பெற்று விடுகிறார். இந்த படத்தில் அவர் அப்பாவி இளைஞர் காந்தி என்ற கேரக்டரில் கன கச்சிதமாக பொருந்தி உள்ளதால் படத்தை ஒன்றி பார்க்க முடிகிறது. சோகமான காட்சிகளில் கூட சிரிக்கும் அவரது அப்பாவித்தனம் ஒரு நோயாக இருந்தாலும் சுற்றி உள்ளவர்களுக்கு அது அநாகரீகமாக தெரிவதும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்த காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
நாயகி ஐஸ்வர்யா மேனனுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு திருப்புமுனையை கொடுக்கும். காதல் காட்சிகளிலும் பாடல் காட்சிகளில் மட்டும் வந்து சென்றாலும் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. ஆதியின் தந்தையாக வரும் படவா கோபி தனது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். கேஎஸ் ரவிக்குமார் மற்றும் ரவி மரியா ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களில் கச்சிதமாக செய்து கொடுத்துள்ளனர். யோகிபாபு, ஜூலி, எருமை சாணி விஜய் உள்பட அனைவரும் தங்கள் கேரக்டர்களை உணர்ந்து நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க காமெடி அம்சத்தைக் கொண்ட 20 நிமிட குறும்படத்தை ஒரு இரண்டு மணி நேர திரைப்படமாக மாற்றிய இயக்குனர் ராணாவுக்கு உண்மையில் பாராட்டு சொல்லத்தான் வேண்டும். இருப்பினும் ரொமான்ஸ் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். காமெடி காட்சிகளில் எல்லாம் தூள் கிளப்பும் ராணா, ரொமான்ஸ் காட்சிகளில் கொஞ்சம் கோட்டை விட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்
ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்கள் வழக்கம்போல் அனைவரையும் கவர்ந்து விடுகின்றன. வாஞ்சி நாதனின் ஒளிப்பதிவு மற்றும் ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் படத்திற்கு கை கொடுத்துள்ளது மொத்தத்தில் காதலர்கள் தினத்தில் சிரிப்பதற்காக ஒரு படம் பார்க்க நினைப்பவர்கள் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்