நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்

நாப்கின் பயன்படுத்தும் பெண்களே கவனம்

4மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் சில தரமற்ற நாப்கின்களால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக, மகளிர் மருத்துவர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர். சந்தையில் கிடைக்கும் நாப்கின்களை ஆய்வு செய்தபோது, சில நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக கூறுகின்றனர் இவர்கள். மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது, பிளாஸ்டிக் வகை பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில், முதல் லேயர் சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது; இரண்டாவது லேயர், மறு சுழற்சி செய்யப்பட்ட, அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்; மூன்றாவது லேயர், ஜெல் (பெட்ரோலிய பொருளால் தயாரானது); கீழ் லேயர் பாலித்தீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகை.

இரண்டாம் லேயரில் உள்ள அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் ரசாயனம் இருப்பதுடன், ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருளாலும் அந்த பேப்பர் பிளீச்சிங் செய்யப்படுகிறது. பெண்கள் இதைப் பயன்படுத்தும்போது, நுண்ணிய துகள்களாகப் படிந்திருக்கும் இந்த ரசாயனங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டை யாக்ஸேன் ஆக மாறுகிறது. கேன்சர் நோய்க்கான மூலக்காரணிகளில் இந்த டையாக்ஸேனும் ஒன்று.

இத்தனை ரசாயனங்களால் ஆன இந்த நாப்கின்களைப் பயன்படுத்துவதால் பிறப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்சனை, வெள்ளைப்படுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் கேன்சர் என்று பல பிரச்சனைகள் வரிசை கட்ட நேரிடுகிறது. அதிக விலை கொடுத்து வாங்கும் நாப்கின்களில் கூட, தயாரிக்கப்படும் தேதிதான் இருக்குமே தவிர, காலாவதி நாள் குறிப்பிடப்படுவதில்லை. சில கம்பெனி தயாரிப்புகளில், மட்டுமே மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தினால் நல்லது என்ற வரிகளை காண முடிகிறது.

இன்று பெண்களின் பூப்படையும் வயது, 13 என்றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து மெனோபாஸ் ஏற்படும், 45 வயது வரை, மாதத்தில் மூன்று, நான்கு நாட்கள் என கிட்டத்தட்ட, 30 வருடங்களுக்கு மேலாக, அவர்கள் நாப்கின் உபயோகிக்கின்றனர். ரசாயனக் கலவைகளால் உருவான நாப்கினை, தொடர்ந்து உபயோகிக்கும்போது, அதன் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாததாகிறது. வெளிநாட்டில் நாப்கின் என்பது, பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பொருள் என்று அக்கறைப்படுவதால், அதன் தரக்கட்டுப்பாட்டு சோதனையை வலுவாக்கி இருக்கிறார்கள்.

மாதவிடாய் காலங்களில் தரமான நாப்கின் உபயோகிக்க வேண்டும். அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் நாப்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். இதுதான் பெண்களை பல சுகாதார பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கும்.

Leave a Reply