நாலுகெட்டு வீடு என்றால் என்ன?
கேரளத்தில் பல பரம்பரைகளாக மரபுவழி மாறாமல் வாழ்ந்துவரும் குடும்ப வீடே நாலுகெட்டு வீடு. திருச்சூர், ஆலப்புழா, தளசேரி போன்ற இடங்களில் இந்த நாலு கெட்டு வீடுகளை அதிகமாகப் பார்க்கலாம்.
நான்கு அறைகளைக் கொண்டும் வீட்டின் நடுப் பகுதியில் நடு முற்றம் கொண்டும் இந்த வீடு அழகாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. முன்பகுதியில் மரத் தூண்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். முன்பகுதியில் விருந்தினர்கள் அமர்வதற்காக மரப் பலகையால் ஆன இருக்கை வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த இருக்கை வளைவான மரப்பகுதி கொண்டு அழகாக்கப்பட்டிருக்கும்.
இதை ‘சாருபடி’ என அழைக்கிறார்கள். இந்த வீட்டின் உள்பகுதி வடக்கினி (வடக்கு), படிஞாற்றுனி (மேற்கு), கிழக்கினி (கிழக்கு), தெக்கினி (தெற்கு) ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு பகுதிகளும் நடுமுற்றத்தில் வந்து முடியும். பொதுவாகக் கேரள வீடுகளில் முன் வாசலுக்கு நேர் எதிராகப் பின் வாசல் இருக்கும். பெரும்பாலும் எல்லா அறைகளிலும் ஜன்னல்கள் இருக்கும். இந்த நடுமுற்றம் மூலம் வெளிச்சமும் காற்றும் வீட்டுக்குள் தாராளமாக வரும்.
வீட்டைச் சுற்றி சுற்று வராந்தாவும் இருக்கும். இந்த வராந்தா முழுவதையும் மர வேலைப்பாடுகளால் ஆன சாருபடி சுற்றியிருக்கும். வீட்டு உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்காக ஒரு குளம் இந்த வீட்டுக்கு அருகிலேயே இருக்கும். இந்தக் குளத்தை அணுகுவதற்கான பாதை இந்தச் சுற்று வராந்தாவிலிருந்து பிரிந்துசெல்லும்.
ஜன்னல்களும் கதவுகளும் பலா, மா, தேக்கு ஆகிய மரங்களின் பலகைகளால் உருவாக்கப்படும். இந்த நாலுகெட்டு வீடுகளில் சமையலறையிலிருந்து நீர் எடுக்கக் கூடிய வகையில் ஒரு கிணறு இருக்கும். இந்தக் கிணற்றின் அடித்தளத்தில் நெல்லிப் பலகை அமைந்திருக்கும். அந்தப் பலகை 30-40 வருடங்கள் ஆனாலும் சேதமடையாமல் உறுதியாக இருக்கும்.
நடுமுற்றத்திலும் வேலைப்பாடுகள் கொண்ட நான்கு மரத் தூண்களால் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நடுவில் துளசி மாடம் இருக்கும். வீட்டின் உள்கட்டமைப்பு பாரம்பரியம் மாறாமல் பிரம்மாண்டமாய் அமைந்திருப்பது வியக்கச்செய்கிறது. எல்லோரும் கூட்டுக் குடும்பங்களாக வாழ்வதற்கே இந்தக் கட்டமைப்பில் வீடுகள் கட்டப்பட்டன.
நாலுகெட்டு வீடு போலவே எட்டு அறைகளும் இரண்டு நடுமுற்றமும் கொண்டு அமைக்கப்பட்டவை எட்டுக்கெட்டு வீடுகள் எனவும், பதினாறு அறைகளும் நான்கு நடுமுற்றமும் கொண்டு அமைந்திருப்பது பதினாறுகெட்டு வீடு என்றும் அழைக்கப்படுகிறது.கேரள வீடுகளே தனி அழகு. இயற்கைச் சூழல் அழிந்துவரும் இந்தக் காலகட்டத்தில் இயற்கையோடு இணைந்து வாழ நாலு கெட்டு வீடுகளே சிறந்தவை.