நிதிப் பற்றாக்குறை இலக்கு எட்டப்படும்: தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி நம்பிக்கை

நிதிப் பற்றாக்குறை இலக்கு எட்டப்படும்: தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி நம்பிக்கை

மத்திய அரசின் நிதிப் பற்றாக் குறை 3.5 சதவீத இலக்கிற்குள் கட்டுப்படுத்தப்படும் என்று தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அந்தோணி லியான்ஸு யாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1982-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐசிஏஎஸ் அதிகாரியான இவர் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். வட கிழக்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை தனது துறை அரசுக்கு வழங்கும் என்று பதவி யேற்றவுடன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். நிதிப் பற்றாக்குறையை 2016-17-ம் நிதி ஆண்டில் 3.5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்துவதற்குத் தேவை யான அனைத்து விவரங்களையும் தனது துறை அரசுக்கு வழங்கி யுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் நிதி நிலையை தினசரி கண்காணிக்க வசதியாக அரசுக்கு நாள்தோறும் ஆலோசனைகளை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். உதாரணமாக மார்ச் மாதத்தில் 15 தினங்களுக்கு தொடர்ச்சியாக அரசின் செலவினம் மற்றும் வரி வருவாய் குறித்த விவரத்தை நாள்தோறும் அளித் துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2016-17-ம் நிதி ஆண்டில், பிப்ர வரி மாதத்தில் அரசின் நிதிப் பற்றாக் குறை ரூ.6.05 லட்சம் கோடியாக இருந்தது. இது அரசின் மொத்த கணிப்பின்படி 113.4 சதவீதமாகும். வரி வருவாய் குறைந்ததால் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

நிதிப் பற்றாக்குறை என்பது அரசின் வருவாய் மற்றும் செலவினத்துக்கு இடையே உள்ள இடைவெளியாகும். முந்தைய நிதி ஆண்டு பிப்ரவரி இறுதியிலும் இதேபோன்ற நிலைதான் நிலவியதாக அவர் குறிப்பிட்டார்.

2016-17-ம் நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையை 3.5 சதவீத அளவுக்குக் கட்டுப்படுத்துவோம் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார். முந்தைய நிதி ஆண்டில் (2015-16) இது 3.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைமை கணக்குத் துறை அளிக்கும் தகவல்கள் அரசுக்கு தனது நிதி நிலை மற்றும் பற்றாக் குறை அளவை மதிப்பீடு செய்ய ஒரு வாய்ப்பாக அமையும். இதன் மூலம் நிதி நிர்வாக மேலாண்மையானது பட்ஜெட் மதிப்பீட்டின்படி உள்ளதா என்பதை ஆராயவும் ஒரு வாய்ப் பாக இருக்கும் என்று லியான் ஸுயாலா குறிப்பிட்டார்.

டெல்லி இந்து கல்லூரியில் பட்டம் பெற்ற லியான்ஸுயாலா மத்திய மற்றும் மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தில் முக்கிய பதவிகளை வகித்தவர். மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம், நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம், மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத்துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றிய அனுபவம் இவருக்குண்டு.

மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் அமைக்கப்பட்ட நிதி நிர்வாகம் மற்றும் கணக்கியல் மையத்தின் முதலாவது இயக்குநர் என்ற பெருமையும் இவருக்குண்டு. வட கிழக்கு மாநிலங்களில் தகவல் தொழில்நுட்ப சேவைகள் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர். மிசோரம் மாநில கருவூலம் முழுவதுமாக கணினி மயமாக்கியதில் இவரது பங்களிப்பு அளப்பரியது. குவஹாத்தியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வடகிழக்கு வேளாண் விற்பனை கார்ப்பரேஷனின் நிர் வாக இயக்குநராக இவர் தேர்ந் தெடுக்கப்பட்டு பணியாற்றி யவர்.

Leave a Reply