நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு கைகொடுக்கும் முதல் வருட சம்பளம்!

நிம்மதியான ஓய்வுக்காலத்துக்கு கைகொடுக்கும் முதல் வருட சம்பளம்!

saveசென்ற தலைமுறையினர் இன்று செல்வந்தராக வாழ்கிறார்கள். ஆனால், இன்றைய தலைமுறையினர் வருங்காலத்தில் ஏழ்மையில் வாழக்கூடும் என்கிற அதிர்ச்சித்  தகவல் இன்றைக்கு 25 வயது உள்ளவர்கள் எத்தனை பேருக்குத் தெரியும்?  

இதற்கு முக்கிய காரணம், சென்ற தலைமுறையினரான நமது பெற்றோர்கள் எதிர்காலத்தை கணித்து அதற்கேற்ப வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைய  தலைமுறையினர் பெரும்பாலும் நிகழ்காலத்தைக் கருத்தில் கொண்டே வாழ்கிறார்களே தவிர, வருங்காலத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. இப்படிப்பட்ட சிந்தனையுள்ள இளைஞர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாள் முழுக்க ஏழ்மையாகவோ அல்லது மற்றவர்கள் உதவியை நாடியோ இருப்பார்கள்.

பொதுவாக, மனிதனின் வாழ்கை நிலை இரண்டு வகைப்படுகிறது.

1. வருமானம் ஈட்டும் நிலை

2. வருமானம் பெறும் நிலை

இந்த நிலையில் மாறாமல் இருந்ததால்தான் சென்ற தலைமுறையினர் இன்றும் ஓய்வூதியத்துடனும், சொத்துடனும் சிறப்பாக வாழ்கிறார்கள். ஆனால், இன்றைய தலைமுறையினர் இந்த முக்கியமான இரண்டு நிலைகளையும் மாற்றி செயல்படுத்துகிறார்கள். அதாவது, இன்றைக்கு கிடைக்கும் வருமானத்தை முதலில் செலவு செய்வதால், வருங்காலத்தில் பணம் தேவைப்படும்போது மற்றவர்களிடம் கையேந்தும் நிலை ஏற்படுகிறது.

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் நீண்ட ஆண்டுகள் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டுவதை விரும்புவதில்லை. மாறாக குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்க வேண்டும். நீண்ட காலம் சுகமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இந்த எண்ணம் எல்லாம் சரிதான் என்றாலும் இதனை செயல்படுத்துவதில்தான் நம் புத்திசாலித்தனம் இருக்கிறது. இந்த எண்ணம் நிச்சயமாக நிறைவேற வேண்டுமெனில், நாம் உடனடியாக முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு மிக எளிய வழி ஒன்று உண்டு. 

வேலைக்குச் சேர்ந்த முதல் ஆண்டில் அந்த சம்பளம் முழுவதையும் முக்கியச் செலவுகள் போக அப்படியே முதலீடு செய்வதன் மூலம் பணி ஓய்வு பற்றி கவலைப்பட வேண்டாம். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும்.

ஒருவர் தனது 25-வது வயதில் வேலைக்குச் சேரும்போது அவரது ஆரம்ப மாதச் சம்பளம் ரூ.30,000 என வைத்துக் கொள்வோம். முக்கியச் செலவுகள் ரூ.10,000 என்றால், மீதியுள்ள ரூ.20,000-ஐ ஓய்வுக் காலத்துக்கு என முதலீடு செய்யலாம்.

முதலாம் ஆண்டு சம்பளம் ரூ.2.40 லட்சத்தை (12*20,000=2.40 லட்சம்) பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். இந்தத் தொகையை பணி ஓய்வுக் காலம் வரை (60 வயது வரை) எந்தக் காரணம் கொண்டும் எடுக்காமல் வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் செய்த முதலீட்டுக்கு 12% கூட்டு வட்டியில் வருமானம் கிடைக்கிறது எனில், அவருக்கு திரும்பக் கிடைக்கும் தொகை ரூ.1.32 கோடியாக இருக்கும்.  இதுவே 15% கூட்டு வட்டியில்  வருமானம் கிடைத்தால், ரூ.3.34 கோடி கிடைக்கும். (பார்க்க அட்டவணைகள்)

ஒருவர் தன் 25-வது வயதில் மாதம் ரூ.40,000 சம்பளத்தில் வேலைக்கு சேர்கிறார். அவரது அவசியச் செலவுகள் ரூ.10,000 போக, ரூ.30,000-த்தை (12*30,000=3,60,000) பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து, அவரது பணி ஓய்வுக் காலம் வரை தொடர்ந்து வைத்திருந்து, அதற்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால் அவருக்கு ரூ.1.99 கோடி திரும்பக் கிடைக்கும். இதுவே 15% வருமானம் கிடைத்தால், ரூ.5 கோடி கிடைக்கும். இந்த வருமானத்துக்கு வருமான வரி எதுவும் கட்டத் தேவை இல்லை என்பது கூடுதல் லாபம்.   

வாய்ப்பு வசதி உள்ளவர்கள் வருமானம் உயரும்போது, இடையில் முதலீடு செய்து, அதனையும் பணிக்காலம் முழுக்க வைத்திருந்தால், ரிட்டையர்மென்ட் பற்றி கவலையே படத் தேவையில்லை.

வேலைக்குச் சேர்ந்த முதலாம் ஆண்டு முழுக்கக் கிடைக்கும் சம்பளத்தில் பெரும் பகுதியை முதலீடு செய்ய சிலருக்கு முடியாமல் போகலாம். கல்விக் கடனை திரும்பக் கட்டவும், குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றவும் சம்பளத்தை பெற்றோரிடம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கலாம். இப்படிப்பட்ட கட்டாயம் இருப்பவர்கள் முதலாம் ஆண்டில் முடிந்தவரை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, அடுத்துவரும் ஆண்டுகளில் முதலீட்டை அதிகரித்து  அதை ஓய்வுக் காலம் வரை எடுக்காமல் இருப்பதன் மூலம் கணிசமான தொகையை திரும்பப் பெறலாம்.

இது மாதிரியான எந்தக் கட்டாயமும் இல்லாதவர்கள் தங்கள் முதல் ஆண்டு சம்பளத்தில் பெரும் பகுதியை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதே நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு செய்யும் அடிப்படை காரியமாகும்.

வேலைக்குச் சேர்ந்தவுடன் கிடைக்கும் முதல் மாத சம்பளத்தை முதலீடு செய்வதால் கிடைக்கும் பணத்தை மட்டும் வைத்து ஓய்வுக் காலத்தை நிம்மதியாக வாழ முடியுமா என்கிற கேள்வி எழலாம். அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் முதலீட்டை அதிகரிப்பது, வேலை நிமித்தமாக அலுவலகத்தில் பிடிக்கப்படும் பி.எஃப். தொகை போன்றவையும் ஓய்வுக் காலத்தை நிம்மதியாக கழிக்க நமக்குக் கை கொடுக்கும்.

வேலைக்கு சேர்ந்தவுடன் கிடைக்கும் சம்பளத்தை எல்லாம் இப்படி முதலீடு செய்ய பலருக்கும் கடினமாகவே இருக்கும். ஆனால், இப்படி முதலீடு செய்யப் போவது ஒரே ஒரு ஆண்டுக்கு மட்டும்தான்.

சில கஷ்டங்களை தாங்கிக் கொண்டு முதலீடு செய்தால் ஓய்வுக் காலம் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

Leave a Reply