நிலத்தடி நீர்மட்டம் ஜீரோ ; கடல் நீரைக் குடிநீராக்கும் ஜீப்!
எவ்வளவு விலையுயர்ந்த வாகனங்கள் வந்தாலும் ஜீப் வாகனத்துக்கு என்று தனி மவுசு உண்டு. காடு, மலைகளில் சுற்ற ஜீப்தான் சரியான வாகனம். நமக்கெல்லாம் ஜீப் பற்றி அவ்வளவுதான் தெரியும். ஆனால், இஸ்ரேலில் ஒரு ஜீப் இருக்கிறது. அதைச் சாதாரண ஜீப் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். நிமிடத்தில் பல லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திறன் படைத்தது அந்த ஜீப்.
இஸ்ரேல் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, டோர் கடற்கரையில் கடல்நீரைக் குடிநீராக்கும் Gal-Mobile Water Filtration Plant-ஐ பார்வையிட்டார். அப்போது, இந்த ஜீப் மோடி முன்னிலையில் கடல்நீரைச் சுத்திகரித்து, குடிநீராக்கியது. அதே இடத்தில், பிரதமர் மோடி, இந்திய அதிகாரிகள் சுத்திகரிக்கப்பட்டக் குடிநீரை ‘டேஸ்ட்’ பார்த்தனர். பின்னர், அந்த ஜீப்பில் பிரதமர் மோடி பயணித்தும் மகிழ்ந்தார்
இந்த ஜீப்பை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று பயன்படுத்தலாம். வெள்ளக்காலத்தில் குடிநீரைச் சுத்திகரிக்கப் பயன்படுத்தலாம். தண்ணீர் பஞ்சம் எங்கெல்லாம் இருக்கிறதோ… அங்கே இதைக் கொண்டுசென்று கடல்நீரைக் குடிநீராக்க முடியும். நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லிட்டர் கடல்நீரையும் 80 ஆயிரம் லிட்டர் ஆற்றுநீரைச் சுத்திகரிக்கும் திறன் படைத்தது.
இஸ்ரேலில் நிலத்தடி நீர்மட்டம் ஜீரோ. அதனால், கடல் நீர்தான் எல்லாவற்றுக்கும். கடல்நீரைக் குடிநீராக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆண்டுக்கு 1.2 பில்லியன் கியூபிக் குடிநீரை இஸ்ரேல் உற்பத்தி செய்கிறது. இதை 2.2 பில்லியன் கியூபிக்காக அதிகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியில் தற்போது இஸ்ரேல் இறங்கியுள்ளது. குடிநீர் தொழில்நுட்பக் கருவிகள் ஏற்றுமதி வழியாக ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர்களை இஸ்ரேல் வருவாயாக ஈட்டுகிறது. நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தில் இஸ்ரேலுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த வகையில், சில தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம்.