நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ய ரோபோ: சீனாவின் பிரமிக்க வைக்கும் சாதனை
இதுவரை பூமியில் இருந்து காண முடியாத நிலவின் மறுபக்கத்திற்கு எந்த நாடும் செயற்கைக்கோள்களை அனுப்பியதில்லை. முதல்முயற்சியாக பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவு செய்யப்பட்ட பிறகு செயற்கைக்கோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடுமுரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனின் குறுங்கோள்களில் ஒன்று நிலவில் தெற்கு அரைக்கோளத்திலுள்ள அய்ட்கன் பேசினில் மோதியதால் அங்கு பெரும் பள்ளம் உண்டானது. எனவே, நிலவு குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கிய காலத்திலிருந்தே வோன் கர்மான் என்னும் இந்த இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தற்போது சீனாவினால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள் இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப் பகுதியின் புவியியல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிப்பதோடு அங்கிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.