நிலையான ஆட்சியை தருவேன்: குமாரசாமி
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக வரும் புதன்கிழமை பதவியேற்கவுள்ள் குமாரசாமி இன்று ஹசன் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, கர்நாடக மாநிலத்தில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சி கொடுப்போம் என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
‘முதலமைச்சர் பதவி என்பது இந்த நேரத்தில் மிகவும் சவாலான பதவி. மற்ற கட்சிகளின் நிலைப்பாட்டையும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். நான் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சியைக் கொடுப்பதை உறுதி செய்யும் வகையில், எங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்’ என குமாரசாமி தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் முதலமைச்சர் பதவி சுழற்சி முறையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளதாகவும் இந்த கோரிக்கைக்கு குமாரசாமி ஒப்புக்கொள்ளாததால் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி இருக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளதாகவும், அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.