ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் செய்தார். வீரப்பம்பாளையம், பெரியவலசு நால்ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, வீரப்பன்சத்திரம் ஆகிய பகுதிகளில் அவர் வாக்குகள் கேட்டு பேசினார்.
அவர் பேசியதாவது, “21 மாதகாலமாக மக்களை சந்திக்க வராத அமைச்சர்கள், இப்போது தேர்தல் என்றதும் இங்கேயே முகாம் அமைத்து வீதிவீதியாக வருகிறார்கள். மக்களை ஏமாற்ற பரோட்டா போடுவது, வடை சுடுவது என்று ஏமாற்றுகிறார்கள். பரோட்டா போடவும், டீ போடவுமா நீங்கள் வெற்றி பெற்றீர்கள். இந்த கிழக்கு தொகுதிக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்றுதானே மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அதை செய்யாமல் மக்களை ஏமாற்றுகிறீர்கள்” என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அப்போது “நீ சரியான ஆம்பளையாக இருந்தால். மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால் வாக்காளர்களை வெளியே விட்டு சந்தித்து வாக்கு சேகரியுங்கள்” என்று கூறினார். இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘மூடர் கூடம்’, ‘கொளஞ்சி’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நவீன் தனது சமூக வலைதளத்தில் எடப்பாடியை விமர்சித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு.
உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்” என்று பதிவிட்டுள்ளார்.