நீங்கள் பத்தோடு பதினொண்ணா… நம்பர் ஒண்ணா..?

நீங்கள் பத்தோடு பதினொண்ணா… நம்பர் ஒண்ணா..?

புத்தகத்தின் பெயர் : Louder Than Words

ஆசிரியர் : Todd Henry

பதிப்பாளர் : Portfolio

பணியிடத்திலோ, உறவுகள் நடுவிலோ அல்லது வேறெங்கெல்லாம் நீங்கள் உங்கள் நேரத்தையும் சக்தியும் செலவிடுகிறீர்களோ, அங்கேயெல்லாம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்களைப் பற்றிச் சொல்வதாக அமைகிறது. உங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது குறித்துச் சொல்வதாக இருக்கிறது. நீங்கள் செய்யும் செயல் உங்களைக் குறித்துச் சொல்வதாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டால், அது உங்கள் நிஜ பிம்பத்தைப் பிரதிபலிக்கிறதா, அதுதான் உங்களைக் குறித்த நிஜமா? இல்லை நீங்கள் பிசியாக வேலையைச் செய்துகொண்டு இருக்க, உங்கள் வேலைகள் தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறதா?

இது ஒரு பெரிய பிரச்னைதான். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இரவு, பகலாக வேர்வை சிந்தி மாங்குமாங்கென்று உழைத்து நீங்கள் ரிசல்ட்களைக் கொண்டுவந்தாலும், உங்கள் ஒரிஜினாலிட்டி என்ன என்பது வெளியே தெரியாமலேயே போய்விட வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலான சமயம், உங்களுடைய சுயத்தை இழந்து, சுற்றியிருக்கும் நபர்களையும் நிறுவனத்தின் குணாதிசயத்தையுமே நீங்கள் உங்களுடையதாக வரித்துக்கொள்ள ஆரம்பிக்கிறீர்கள். இப்படி நீங்கள் உங்கள் சுயத்தை இழந்து, நிறுவனத்தின் பெரும் சுழலில் சிக்கி, அதற்கேற்றாற்போல் உங்கள் செயல்பாடுகள் மாறிவிட்டால் என்னவாகும்?

புதுமை என்பதே உங்களிடத்தில் இல்லாது போகும். உதாரணத்துக்கு, நிறுவனத்தில் எல்லோருக்கும் சுலபமாக இருப்பது உங்களுக்கும் சுலபமாக இருக்கும். நிறுவனத்தில் எல்லோருக்கும் கடினமாக இருப்பது உங்களுக்கும் கடினமாக இருக்கும். அதுபோன்ற சூழலில் எங்கேயிருந்து உங்களிடம் புதுமை வெளிவரும்? வெளிவராது இல்லையா!

உலகில் பெரும்பான்மையான தனித்துவமும், புதுமைகளைக் கொண்டுவந்து சேர்க்கும் குணமும் கொண்ட நபர்களின் செயல்பாட்டை ஆராய்ந்துபார்த்தால், ஒன்று தெளிவாக விளங்கும். அவர்களிடம் இருந்து வெளிப்படும் தனிப்பட்டக் குரல். அப்படி என்றால்..? அவர்கள் ஈடுபட்டுள்ள துறையில் அவர்களுடன் இருப்பவர்களுடைய குணாதிசயங்கள்/செயல்பாடுகள் போன்ற எவற்றுடனும் ஒன்றிப்போகாமல் ஒரு தனித்தன்மையுடன் கூடிய சிறப்பானதொரு செயல்பாட்டைக் கொண்டிருப்பதையே குரல் என்கிறோம். ஒரு கன்சல்டன்ட்டாக, இன்ஜினீயராக, மேனேஜராக, நடிகராக உங்களுக்கென்று ஒரு தனிக்குரலை உருவாக்கிக்கொண்டால் மட்டுமே நீண்ட நாள்களுக்கு நீங்கள் நிலைத்திருக்கமுடியும். அது இல்லாவிட்டால் நீங்களும் நீங்கள் பார்த்த வேலையும் பத்தோடு சேர்ந்து பதினொன்றாகிவிடும். இது இருந்துவிட்டால், என்னதான் பழக்கமான, வழக்கமான வேலையாக இருந்தாலும், ‘அதை அவர் செய்யும் விதமே வேற லெவலப்பா!’ என்று அனைவரும் சொல்வார்கள். அப்போதுதான் உங்களின் குரல் அதில் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும்.

குரல், குரல் என்கிறீர்களே, தொண்டைக்குழியில் இருந்து வரும் குரலா என்று நீங்கள் கேட்கலாம். அது இல்லை. இந்தப் புத்தகத்தில், செய்யும் செயலில் வெளிப்படும் குரல் என்று சொல்லப்படுவது என்ன என்பதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்.

ஒரு வேலையைச் செய்கிறோம். இதன் முடிவு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த முடிவைச் சாதாரணமாகச் செய்தாலும் எட்ட முடியும். கொஞ்சம் ரசித்து, ருசித்து அதிகபட்ச சிரத்தையுடன் செய்து, நம்முடைய முத்திரையைப் பதித்தும் முடிவை எட்டவும் முடியும். சினிமா, இசை, ஓவியம் என்பதில் இதைச் சுலபத்தில் காண முடியும். குறிப்பிட்ட கலைஞரின் ‘டச்’ என்பது இருந்தால், அதில் மனநிறைவு மிக அதிகமாக இருக்கும்.

அதேபோல்தான், நாம் செய்யும் ஒவ்வொரு வேலையிலும். நம்முடைய ‘டச்’ இருக்கும்படி அது இருக்க வேண்டும். அப்படி செய்யப்படும்போது அந்த வேலை உங்களை, உங்கள் எண்ணங்களை, உங்கள் மதிப்பீடுகளை, உங்கள் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக அமையும். அப்படி முழுமையான பங்களிப்புடன் செய்யப்படும் வேலைகள் மட்டுமே அவற்றின் சாதாரண பலன்களைத் தாண்டி அனைவராலும் நினைவில் கொள்ளப்படும் என்கிறார் ஆசிரியர்.

குரலைக் கண்டறிந்து அதை நான் செய்யும் எல்லா செயல்களிலும் பிரதிபலிக்கிறேன் என்று சொல்லி, உங்கள் சுயத்தை ஒளித்து வைத்து விட்டு நடிப்பில் இறங்கிவிடக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்கிறார் ஆசிரியர்.

உங்களுக்கென்று ஓர் அடையாளம், நோக்கம், தேர்ச்சி என்ற மூன்றையும் உருவாக்கினால் தான் உங்களால் ஓர் உண்மையான தொரு குரலை உருவாக்க முடியும். புரிவதற்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறதா? ஒரு சின்ன உதாரணம் மூலம் பார்ப்போம்.

எப்போதாவது உங்கள் குரலைப் பதிவுசெய்து கேட்டிருக்கிறீர்களா? ஒருமுறை கேட்டுப் பாருங்கள். நாம் நம்முடைய குரல் என்று நினைத்துக் கொண்டிருப்பதற்கும் நமக்குக் கேட்கும் குரலுக்கும் எக்கச்சக்கமான வேற்றுமைகள் இருக்கும். அதனால்தான் பலரும் தங்களுடைய குரலைப் பதிவு செய்து கேட்கும்போது முகம் சுளிக்கின்றனர். பலர் கேட்கவும் விரும்புவதில்லை. ஏனென்றால், யாரோ பேசுவதுபோல் இருக்கும். கேட்பதுதான் அவர்களுடைய குரல் என்பதைச் சிலரால் ஒப்புக்கொள்ளவே முடியாத அளவுக்கே இருக்கும்.

குரலில் இந்த அசலுக்கும் நகலுக்கும் இருக்கும் வித்தியாசம் எந்தளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கே நாம் பேசிக் கொண்டிருக்கும் வாய்ஸிலும் இருக்கும். ஏனென்றால், நாம் செய்யும் செயல்களின் வழியாக வெளிப்படும் நம்முடைய குரல் நம்முடைய ஒரிஜினல் குரலாக பெரும்பாலும் இருப்பதில்லை. நாம் செயல்படும் சூழல், உடன் இருப்பவர்கள், நாம் வேலை பார்க்கும் நிறுவனம் இவற்றுக்கு ஏற்றாற்போல் மாறுபட்டதாகவே அவை இருக்கிறது என்கிறார்.

அடையாளம், நோக்கம், மற்றும் தேர்ச்சி இந்த மூன்றும் சேர்ந்ததே சரியானதொரு குரலாக இருக்கும் என்கிறார் ஆசிரியர். அடையாளமும், நோக்கமும் இருந்து தேர்ச்சி இல்லாவிட்டால், அந்தக் குரலில் நம்பகத்தன்மை இருக்காது. அடையாளமும், தேர்ச்சியும் இருந்து நோக்கம் இல்லாவிட்டால், அந்தக் குரல் தெளிவானதாக இருக்காது. தேர்ச்சியும், நோக்கமும் இருந்து அடையாளம் இல்லாவிட்டால், அந்தக் குரல் சொல்வதை மற்றவர்களால் உணர முடியாது (மற்றவர்களுக்குக் கேட்காது!). அடையாளம், நோக்கம் மற்றும் தேர்ச்சி என்ற மூன்றும் ஒருசேர இருந்து கேட்கும் குரல் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்கிறார் ஆசிரியர்.

இதில் அடையாளம் என்பது நாம் யார் என்று நிர்ணயித்துக்கொள்வது. நோக்கம் என்பது நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்பதைக் குறிப்பிடுகிறது. தேர்ச்சி என்பது எப்படி நாம் நம்முடைய அடையாளத்தை வைத்துக்கொண்டு நோக்கத்தைச் சென்றடையப் போகிறோம் என்ற வழிவகையைக் குறிக்கிறது. இந்த மூன்றையும் அடைவதில் என்னென்ன சிக்கல்கள் நமக்கு வர வாய்ப்பு உள்ளது?

பயம், பொய்யான எண்ணம் மற்றும் செயலற்ற தன்மை என்ற மூன்று விஷயங்களே நாம் நம் குரலைக் கண்டறிவதில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஆகும்.

மூன்று பிரிவுகளாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ஒன்று, ஏன் நம்மில் பலரும் நம்முடையக் குரலை (டச்!) கண்டறிந்து வளர்த்தெடுக்கச் சிரமப்படுகிறோம் என்பதை விவரிப்பதாக இருக்கிறது. இரண்டாவது பகுதி, எப்படி நம்முடைய குரலைக் கண்டுபிடித்து வளர்த்தெடுப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவது என்பதை விவரிப்பதாக இருக்கிறது. மூன்றாவது பகுதி, நாம் போட்ட திட்டங்களை எப்படி அன்றாடம் நடைமுறைப்படுத்தி நீண்ட நாள்களுக்கு நாம் செய்யும் பணிகளில் எல்லாம் நம்முடைய குரல் இழைந்து ஒலிப்பதைப்போல் பார்த்துக்கொள்வது என்பதை விவரிக்கிறது.

இறுதியாக, பலநூறு வெற்றியாளர்களிடம் நீங்கள் எப்படி இந்த பர்சனல் டச்சைக் கொடுப்பதில் கைதேர்ந்தவர்களாக மாறினீர்கள் என்று கேட்டால், அவர்கள் அனைவரும் சொன்ன பெரும்பான்மையான பதில் என்ன தெரியுமா?

அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து செய்ததும், பொறுமையுடன் இருந்ததும் என்ற இரண்டு விஷயங்களை மட்டுமே சொன்னார்கள். நாமும் இவை இரண்டையும் கடைப்பிடித்து நம்முடைய செயல்களில் நம் குரலை ஒலிக்கச் செய்ய முயற்சி செய்யலாம்போல இருக்கிறதே என்று நினைக்கத் தூண்டும் அளவுக்கு விளக்கமாக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒரு முறை படிக்கலாம்.

Leave a Reply