”நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்” -சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு..!
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் கடந்த மார்ச் 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், ”தொழில்நுட்ப கோளாறு காரணமாக எங்களுடைய விண்ணப்பங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனை காரணமாக கூறி எங்கள் விண்ணப்பங்களை சி.பி.எஸ்.சி நிராகரித்ததது. இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்குள் இறுதி நாள் முடிந்துவிட்டது. எனவே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்த எங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.” என கோரி 38 மாணவ,மாணவியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட 38 மாணவர்களை நீட் தேர்வு எழுத அனுமதிக்குமாறு, சி.பி.எஸ்.சி இயக்குநருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.சி மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை, இன்று நீதிபதி புஷ்பா விசாரித்தார்.
விசாரணையின் முடிவில் சி.பி.எஸ்.சியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த அவர், ஏற்கனவே அளித்த தீர்ப்பை உறுதி செய்தார். அதன்படி ” தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீட் தேர்வுக்கு தாமதமாக விண்ணப்பித்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றாவிட்டால், சி.பி.எஸ்.சி இயக்குநர், நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டி இருக்கும்.” என எச்சரித்தார்.