நீட் தேர்வு முறையால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்: நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா
நீட் தேர்வு முறையினால் கிராமப்புறங்களிலிருந்து பயில வரும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா தெரிவித்தார்.
சென்னை ரஷிய அறிவியல் கலாசார மையம், இந்திய வெளிநாட்டு மருத்துவ பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கம், சென்னை சர்வதேச மருத்துவக் கல்வி,ஆராய்ச்சி நிலையம் சார்பில், ரஷியாவில் உயர் மருத்துவக் கல்வி குறித்த கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தலைமை விருந்தினர்களாக ரஷிய தூதரக மூத்த அதிகாரி செர்ஜி எல்.கோத்தெவ், ரஷிய சவ்ரபோல் மருத்துவ பல்கலைக்கழக வேந்தர் கோசல் விளாடிமிர் இவனேவிச், அமெட் பல்கலைக்கழக வேந்தர் ஜெ.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதுபோல், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, நோபள மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி ரவில்லா பாஸ்கரன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.அசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கில் அன்வர்ராஜா பேசியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு முறை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக, பெருநகரங்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எளிமையாக நீட் தேர்வை எதிர்கொள்வர். ஆனால், கிராமப்புற, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களால் எதிர்கொள்வது கடினம். அதுபோல், மாநிலத்தில் நடைமுறையில் இருந்துவரும் இடஒதுக்கீடு முறையே சிறந்தது. இதன்மூலம், கிராமப்புற மாணவர்களுக்கும் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம், கிராமப்புறப் பகுதிகளுக்கு மருத்துவர்கள் உருவாகினர். இப்போதும் கிராமப் பகுதிகளில் பணிபுரிய ஏராளமான மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர்.
ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூட பற்றாக்குறை நிலவுகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண சொந்த ஊர்களிலிருந்து மருத்துவம் பயில்வது அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் மாவட்டம், கிராமம் தோறும் மருத்துவர்கள் அதிகரிப்பர்.
இந்த சூழ்நிலையில், நீட் தேர்வு முறை அவசியமில்லாதது. எனவேதான் இந்த தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். அதுபோல், மருத்துவம் தொழில் என பாராமல், மனித நேய அடிப்படையில் ஏழைகளுக்கு சேவை புரிவது மிக அவசியம் என்றார் அவர்.