நீரின் அருமை தீயில் தெரியும்
இனி ஆன்மிகப் பாதைதான் என்று தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்வதற்கு, மனித இதயத்தை பல்வேறு விதமான உணர்வு நிலைகள் வழிநடத்துகின்றன. இதற்கு மத நம்பிக்கை, அண்டைவீட்டானை நேசிப்பது அல்லது சேவை போன்ற ‘புனித’ காரணங்கள் இருக்கலாம்; தற்செயலாக ஏற்படும் எண்ணம், தனிமையுணர்வு தொடர்பான அச்சம், வெறும் ஆர்வம் அல்லது மரண பயம் போன்ற காரணங்களும் இருக்கலாம். அதெல்லாம் விஷயமே அல்ல.
உண்மையான ஆன்மிகப் பாதை என்பது நம்மை இட்டுச்செல்லும் காரணங்களைவிட வலுவானது. அது சிறிது சிறிதாக நேசத்துக்கும் ஒழுக்கத்துக்கும் மேன்மைக்கும் நம்மை வலியுறுத்தக்கூடியது. நாம் திரும்பிப் பார்க்கும் ஒரு கணம் வரும். நமது பயணத்தின் தொடக்கத்தை நினைவுபடுத்தி நம்மை நாமே பார்த்து சிரித்துக்கொள்ளும் தருணமாக அது இருக்கும். நாம் தேர்ந்த பயணத்துக்கான காரணங்கள் மிகவும் பொருளற்றவையாக தெரிந்தாலும் ஏதோ ஒருவகையில் நாம் வளர்ந்திருப்போம். கடவுள் தனிமையைப் பயன்படுத்தி சேர்ந்து வாழ்வதைப் பற்றிக் கற்றுத் தருகிறார்.
கோபத்தைப் பயன்படுத்தி சில சமயங்களில் அமைதியின் காலாதீதமான மதிப்பை நாம் புரிந்துகொள்ளச் செய்கிறார். சலிப்பைப் பயன்படுத்தி சாகசம் மற்றும் விட்டு விடுதலையாவதைக் கற்றுத் தருகிறார். மௌனத்தைப் பயன்படுத்தி நாம் வெளியிடும் வார்த்தைகள் தொடர்பான பொறுப்புணர்வைச் சொல்கிறார். சோர்வைப் பயன்படுத்தி எழுதலின் மதிப்பைப் புரிந்துகொள்ள வைக்கிறார். நோய்மையைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் நமக்கு உணர்த்தப்படுகிறது. கடவுள் மரணத்தை நம் முன்னர் நிகழ்த்திக் காண்பிக்கும்போது, வாழ்க்கையின் முக்கியத்துவம் விளங்குகிறது. ஏதோ ஒரு காரணத்துக்காக நீங்கள் உங்கள் பாதையைத் தொடர முடியாத நிலை ஏற்படும் போதெல்லாம் நான் மேற்சொன்னதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்.