நெட்டிசன்ஸ்கள் வெறுக்கும் இதுதான் இணைய வியாபாரத்தின் காந்தம்!

நெட்டிசன்ஸ்கள் வெறுக்கும் இதுதான் இணைய வியாபாரத்தின் காந்தம்!

இணையம் பயன்படுத்தும் அனைவரும் வெறுக்கும் விஷயங்களில் மிக முக்கியமானது பாப்-அப் விளம்பரங்கள் (Pop-Up Ads). இணையத்தில் பிரவுஸ் செய்யும்போது மற்றொரு விண்டோவில் தனியாகத் திறக்கும் விளம்பரம் தான் பாப்-அப் ஆட்ஸ் எனப்படுகிறது. வலைதளங்களின் ட்ராஃபிக்கை அதிகரிக்க, குறிப்பிட்ட ஒரு தயாரிப்பை விளம்பரப்படுத்த, இ-மெயில் முகவரிகளைப் பெற என பாப்-அப் விளம்பரங்கள் பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இணையதளத்தின் உரிமையாளர்களுக்கு அதிக விளம்பர வருவாய் தந்தாலும், இணையத்தைப் பயன்படுத்தும் அனைவரையும் வெறுப்பேற்றிய பெருமையும் இதற்கு உண்டு.

பாப் அப் விளம்பரங்கள்

ஈதன் சக்கர்மேன் (Ethan Zuckerman) என்பவர் தான் பாப்-அப் ஐடியாவை உருவாக்கியவர். ஆனால், அவர் அதை உருவாக்கியதற்கான காரணம் வேறு. இணையதளங்களை ஹோஸ்ட் செய்யக்கூடிய ட்ரைபாட் என்ற தளத்தில் ஈதன் வேலை பார்த்து வந்தார். 18+ தளங்களில் தங்களுடைய பேனர் விளம்பரம் காட்டப்படுவதாக கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, ட்ரைபாட் தளத்தில் புகார் அளித்தது. வலைதளத்தின் பக்கத்திலேயே விளம்பரம் காட்டப்படுவதற்குப் பதிலாக, தனியாக மற்றொரு விண்டோவில் விளம்பரம் வந்தால் பிரச்னை முடிந்தது என நினைத்த ஈதன், இதற்காக கோட் எழுதினார். இப்படிதான் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பே பாப்-அப் விளம்பரங்களின் வரலாறு உருவானது.

கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு பாப்-அப் விளம்பரங்களின் வணிகம் நடைபெற்று வருகிறது. விளம்பரங்கள் கணிசமான தொகையை வருவாயாகத் தர ஆரம்பித்ததால், பிற்காலத்தில் பாப்-அப் என்பது விளம்பரங்களுக்காக மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது. தனியாக ஓப்பன் ஆன விண்டோவை மூடுவதற்காக, க்ளோஸ் பட்டனை கிளிக் செய்தால் விளம்பரதாரரின் வலைதளம் ஓப்பன் ஆனது. அதே நேரத்தில், மால்வேர்களை கணினியில் இன்ஸ்டால் செய்வதற்காக ஹேக்கர்கள் பாப்-அப் கான்சப்ட்டைத் தேர்ந்தெடுத்தனர். இதனால் பயனாளர்கள் பாப்-அப் விண்டோக்களைப் பார்த்ததுமே பொறுமை இழக்கத் தொடங்கினர். இணையத்தைப் பயன்படுத்துபவர்களால் அதிகம் வெறுக்கக்கூடிய விஷயமாகவும் பாப்-அப் விளம்பரம் மாறியது.

பாப்-அப் விளம்பரங்கள் தனியாக மற்றொரு விண்டோவில் ஓப்பன் ஆனதுமே, 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பேர் உடனடியாக அதை மூடிவிடுவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. பாப்-அப் உருவாக்கிய ஈதன் சக்கர்மேன், தனது படைப்புக்காக பிற்காலத்தில் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ‘நல்லெண்ணத்துக்காக நான் உருவாக்கிய டூல், இன்று பலரும் வெறுக்கும் அளவுக்கு மாறிவிட்டது. அதை உருவாக்கியதற்காக மன்னிப்பு கேட்கிறேன்’ என்று ஈதன் வருத்தம் தெரிவித்தார்.

Ethan Zuckerman

நெட்டிசன்கள் மத்தியில் பாப்-அப் சம்பாதித்த வெறுப்பு அத்தனையும், ஆட் ப்ளாக் நிறுவனங்களுக்கு வருவாயாக மாறியது. இணையம் பயன்படுத்தும் அனைவரிடமும் ஆட்-ப்ளாக்கின் செல்வாக்கு உயர்ந்தது. இன்றைய தேதியில் Adblock Plus மட்டுமே 10 கோடிக்கும் அதிகமான டிவைஸ்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு சில இணையதளங்களின் விளம்பரங்களை மட்டும் பயனாளர்களுக்குக் காண்பிக்கத் தொடங்கின ஆட் ப்ளாக் நிறுவனங்கள்.

விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் கூகுள் நிறுவனம், இந்த விஷயத்தில் தற்போதுதான் சுதாரித்திருக்கிறது. விளம்பரங்களைத் தடுக்கும் சேவையைத் தனக்குச் சொந்தமான குரோம் பிரவுசரில், விரைவில் கூகுளே கொண்டுவர இருக்கிறது. நெட்டிசன்கள் அதிகம் வெறுக்கும் பாப்-அப் விளம்பரங்கள் உள்ளிட்ட சிலவற்றை மட்டும் ப்ளாக் செய்தால், மற்ற விளம்பரங்களை வலைதளங்களில் வழக்கம்போல் காண்பிக்கலாம். Adblock Plus போன்ற மூன்றாம் நபர் விளம்பரத் தடுப்பு சேவைகளை நெட்டிசன்கள் பயன்படுத்த மாட்டார்கள் என்பது கூகுளின் கணிப்பு.

பாப்-அப் விளம்பரங்கள் உருவானது ஒரு காரணத்திற்காக என்றாலும், இன்று அவை பல்வேறு இணையதளங்களின் வருவாயையும், ட்ராஃபிக்கையும் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

Leave a Reply