நெருங்குகிறது காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தை தாக்கும் மேலும் ஒரு புயல்?
வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் டெல்டா பகுதி மக்கள் மீளாத நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி தமிழகத்தை நெருங்குவதால் இன்னும் இரண்டூ நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு திசை நோக்கி நகர்ந்து நவம்பர் 20-ந்தேதி தேதி அதாவது நாளை தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதியில் நிலைகொள்ளக்கூடும். எனினும் இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் கனமழைக்கு மட்டுமே வாய்ப்பு என்று வானிலை அதிகாரி தெரிவித்தார்.
இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மீனவர்கள் இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், நாளை தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.