நோட்டு நடவடிக்கையில் ஆர்பிஐ கவர்னர் மவுனம் ஏன்?- சக்திகாந்த தாஸ் பதில்

நோட்டு நடவடிக்கையில் ஆர்பிஐ கவர்னர் மவுனம் ஏன்?- சக்திகாந்த தாஸ் பதில்

1ரூபாய் நோட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 வாரங்கள் ஆகியும் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடாதது குறித்து பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

ரூபாய் நோட்டு நடவடிக்கைக்குப் பிறகு கடும் பண நெருக்கடியில் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் ஆர்பிஐ கவர்னர் இப்போது வரை வாயைத் திறக்காமல் இருப்பது ஏன் என்று செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த சக்திகாந்த தாஸ், “யார் அரசின் சார்பாக பேசுகிறார்கள் என்பது தேவையற்ற விஷயம். அரசின் சார்பாக நான் தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் அரசின் சார்பாகவே பேசி வருகிறேன், தனிப்பட்ட முறையில் அல்ல, எனவே நான் பேசுகிறேனா, அல்லது வேறு யாராவது பேச வேண்டுமா என்ற கேள்வி தேவையற்றது.

நாம் இந்தக் கேள்விகளை எழுப்ப வேண்டாமே! யார் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள் என்பது சம்பந்தமற்ற கேள்வி. அரசு அனைத்து தேவையான தகவல்களையும் மக்களிடம் அளிக்க வேண்டும், அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

நிதிச் செயலர் அசோக் லவாசா அல்லது நிதிச்சேவைகள் செயலர் அஞ்சுலி சிப் தக்கல் ஆகிய இருவரில் ஒருவர் கூட செய்தியாளர்களை இது குறித்து சந்திக்கவில்லை.

நாட்டில் புழங்கும் பணத்தை வெளியிடுவது ஆர்பிஐ, பணநிர்வாகம் அதன் முக்கியப் பணிகளில் மையமானது. ஊடகத்திலிருந்து விலகல் முகம் கொண்டுள்ள ஆர்பிஐ கவர்னர், கடந்த செப்டம்பரில் ரகுராம் ராஜனுக்குப் பிறகு பொறுப்பேற்றார். நாட்டில் புழக்கத்தில் உள்ள 86% நோட்டுகளை விலக்கிக் கொண்டுள்ளது, அடுத்தகட்ட நடவடிக்கை, ஏற்பாடுகள் குறித்து எந்த வித அறிக்கையயும் இதுவரை வெளியிடாதது பலதரப்பினருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூபாய் நோட்டு நடவடிக்கைக்குப் பிறகே பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ்தான் அனைத்து உத்தரவுகளையும் தொடர்புபடுத்தி வருகிறார்.

வங்கிகள் தரப்பிலிருந்து எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்ய ஏடிஎம் மாற்றி அமைக்கப்படுவது பற்றியும் பணத்தின் இருப்பு பற்றியும் தொடர்புபடுத்தி வருகிறார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியதில் பங்கு வகித்ததற்காக ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தனது பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply