நோயற்ற வாழ்வுக்கு பாரம்பரிய உணவுக்கு மாறுங்கள்

நோயற்ற வாழ்வுக்கு பாரம்பரிய உணவுக்கு மாறுங்கள்

நாம் உண்ணும் பாரம்பரிய அரிசியில் தீர்வு உண்டு. நோய் உருவாகாமல் இருப்பதற்கும், சீரான உடல் நிலைக்கும் பாரம்பரிய அரிசி உதவும்.இது குறித்து விளக்குவதே இக்கட்டுரை

“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று”

பல நூறு வருடங்களுக்கு முன் எவ்வித தொழில் நுட்பமும் இன்றி, மனித வாழ்வின் ரகசியத்தை இரண்டே வரியில் கூறிவிட்டார் திருவள்ளுவர். உணவாலும் செயலாலும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் நிலையான தன்மையே மனிதன் நோயில்லாத வாழ்க்கை வாழ உதவும்.

ஆனால், இன்றைய நிலைமையோ வேறு. நாம் உண்ணும் உணவில் சத்து இருக்கிறதா என்று பார்ப்பதை விட, விஷம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டிய நிலைமைக்கு நாம் வந்துவிட்டோம். உணவை விஷம் என்று எப்படி கூற முடியும் என்று நீங்கள் எண்ணலாம், உடனடியே கொல்லுவது மட்டும் விஷம் அல்ல, மெல்ல மெல்ல நோயை உருவாக்கி ஒருவரை கொல்லுவதும் விஷமே.

துரித உணவு மட்டும் அல்ல நாம் உண்ணும் அரிசி வகைகள் கூட விஷமாய் மாறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பொதுவாக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி வகை உணவை உண்ணமாட்டார்கள். ஆனால், நாம் பாரம்பரியமாக விதைத்து வரும் அரிசி வகைகளில், மாப்பிள்ளை சம்பா, காட்டுயாணம் போன்ற நெல் வகைகளுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.

பாரம்பரிய நெல்வகைகளை பாதுகாக்க பாடுபட்டவர், மண்வாசனை’ அமைப்பை சேர்ந்த திலகராஜன். பாரம்பரிய நெல் வகைகளை பாதுகாக்க வேண்டியும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தன் வாழ்க்கையில் பெரும்பகுதியை செலவழித்தார். கடந்த ஜுன் மாதம் திலகராஜன் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார்.

அவரது மரணத்துக்கு பின், தன் கணவரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்றும், மக்களுக்கு பாரம்பரிய உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் உறுதி கொண்டு செயல்பட்டு வருகிறார் திலகராஜனின் மனைவி மேனகா. ஒரே இடத்தில் 100 வகை பாரம்பரிய அரிசி வகைகளை சமைத்து துணை உலக சாதணை (Assist World Record) விருதை இன்று பெற்றுள்ளார் மேனகா திலகராஜன்.

இது குறித்து மேனகா திலகராஜன் ‘தி இந்து’ தமிழ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியது:

“எனது கணவர் திலகராஜன் 8 வருடங்களாக பாரம்பரிய அரிசி வகைகளை சேகரித்து வந்தார். நம்மாழ்வார் அய்யாவை சந்தித்த பிறகு, அவர் பாரம்பரிய அரிசி வகைகளை தேடி இந்தியா முழுவதும் பயணம் செய்தார். பாரம்பரிய அரிசி வகை குறித்து அவர் எற்படுத்த நினைத்த விழிப்புணர்வை அவர் இல்லாததால், இன்று நான் முன்னெடுத்திருக்கிறேன்.

இன்று 100 வகை பாரம்பரிய அரிசி வகைகளை கொண்டு, பாரம்பரிய முறையில் உணவு தயாரித்தோம். இதில் அதிக அளவில் பெண்களும், திருநங்கைகளும் கலந்துகொண்டனர். பாரம்பரிய அரிசியை தமிழ்நாட்டில் உள்ள எல்லா கடைகளுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்பது தான் எனது அடுத்த குறிக்கோள்.

எல்லா நோய்களுக்கும், நாம் உண்ணும் பாரம்பரிய அரிசியில் தீர்வு உண்டு. நோய் உருவாகாமல் இருப்பதற்கும், சீரான உடல் நிலைக்கும் பாரம்பரிய அரிசி உதவும். பாரம்பரிய அரிசி அதிகம் விளைவிக்காததுக்கு காரணம், மக்கள் அதை அதிகம் வாங்குவதில்லை. நுகர்வோர்கள் அதிகம் இருந்தால், விளைச்சலும் அதிகம் இருக்கும். நாம் சக்கையை உண்பதை நிறுத்திவிட்டு, பாரம்பரிய அரிசிக்கு மாற வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

உணவே மருந்து என்பதை நினைவில் கொண்டு, நாம் அனைவரும் பாரம்பரிய உணவு முறைக்கு மாறினால், நோய் இல்லாத வாழ்வை வாழலாம்.

Leave a Reply