நோயாளிக்கு என்ன பரிசு கொடுக்கலாம்!
உடல்நலம் இல்லாமல் நோயால் பாதிக்கப்பட்டு அல்லது விபத்துகளில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அல்லது சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வு எடுக்கும் உறவினரையோ, நண்பரையோ பார்க்கச் செல்கையில் ,என்ன வாங்கிச் செல்லலாம்?
ஏதாவது வாங்கிச் செல்ல விரும்பினால், முதலில் அவருக்கு உணவுக் கட்டுப்பாடு ஏதேனும் விதிக்கப்பட்டிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. நோயின் தன்மையைப் பொருத்து சிலருக்கு உப்புக் கட்டுப்பாடு, திட உணவுக் கட்டுப்பாடு, நீராகாரக் கட்டுப்பாடு என மருத்துவர் பரிந்துரைத்திருக்கலாம்.
இதுதெரியாமல், அந்தப் பொருட்களை வாங்கிச் செல்வதால், நோயாளிக்கு எந்த பயனும் இல்லை.
பொதுவாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியைச் சென்று சந்திக்கும்போது, உணவுப் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டாம். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் இதை அனுமதிப்பதும் இல்லை.
ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளைப் பார்க்கச் சென்றால், நிச்சயம் உணவுப் பொருட்கள் வேண்டாம். ஐ.சி.யூ-வில் இருப்பவர்களைப் பார்க்க, குழந்தைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம்.
பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளின் டயட் தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஆதாலால், நீங்கள் வாங்கிச் செல்லும் உணவுப் பொருட்களை வற்புறுத்தி ஊட்டிவிடுவது தவறு.
யாருக்கு என்ன வாங்கி செல்லலாம்?
சர்க்கரை நோய் உள்ளவர்களைப் பார்க்கச் செல்லும்போது, மாவுச்சத்து, இனிப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். மாம்பழம், வாழைப்பழம், திராட்சை போன்ற அதிக இனிப்பான உணவுப் பொருட்கள் கூடாது.
இவர்களுக்கு, ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லலாம். தானியங்கள் கலந்த (Whole grain) கோதுமை ரொட்டி கொடுக்கலாம்.
வயதானவர்களுக்கு, குறைந்த கொழுப்புடைய பால் பொருட்கள், ஓட்ஸ், கோதுமை ரொட்டி, பருவகாலப் பழங்கள் வாங்கிச் செல்லலாம். அதிக இனிப்பு கொண்ட பொருட்களைத் தவிர்ப்பது நலம்.
குழந்தைகளுக்கு, பால் பொருட்கள், உலர் பழங்கள், சீஸனல் பழங்கள் வாங்கிச் செல்லலாம். ஏற்கெனவே மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளுவதால், பிஸ்கட் போன்றவற்றை வாங்கிச் செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். இது, சில குழந்தைகளுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
குழந்தைகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் வாங்கிக்கொடுக்கலாம்.
இதய நோயாளிகளுக்கு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Precessed foods), கேன் உணவுகளை (Canned foods) அறவே தவிர்க்கவும். கொழுப்புச்சத்து மற்றும் உப்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டாம். துரித உணவுவகைகளையும் வாங்கிச் செல்ல வேண்டாம்.
கர்ப்பிணிகளைப் பார்க்கச் செல்லும்போது, பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களைத் தவிர்க்கலாம். ஆப்பிள், மாதுளை போன்ற பழ வகைகள் ஓகே.
சில பெண்களுக்கு கர்ப்பக் காலத்தில் ஏற்படக்கூடிய சர்க்கரைநோய் பிரச்னை இருக்கும். இவர்களுக்கு சர்க்கரை அதிகம் உள்ள பொருட்கள் மற்றும் பால் பொருட்கள் வாங்கிச் செல்வதைத் தவிர்க்கவும்.
கர்ப்பகாலத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிய விளக்க புத்தகங்கள், குழந்தையின் ஒவ்வொரு வார வளர்ச்சி பற்றிய விளக்க புத்தகத்தைப் பரிசளிக்கலாம். குழந்தை பராமரிப்பு பற்றிய புத்தகங்கள் கர்ப்பிணிகளை பெரிதும் ஈர்க்கும்.
சமீபத்தில் குழந்தை பெற்ற பெண்களைப் பார்க்கச் செலும்போது ரஸ்க் வாங்கிச் செல்லலாம். பேரீச்சம்பழம், திராட்சை வாங்கிக் கொடுக்கலாம்.
மருத்துவமனையில், உடல் முடியாமல் வீட்டில் தங்கியிருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் கழிப்பது எவ்வளவு கொடுமையானது என்று நோயாளிகளைக் கேட்டால் தெரியும். நேரத்தை செலவிட நல்ல புத்தகங்களை பரிசளிக்கலாம். பாட்டு கேட்கும் வசதி இருந்தால், மனதை வருடும் பாடல்கள், விடியோ, நகைச்சுவைக் காட்சிகள் சி.டி பரிசளிக்கலாம்.
மூளைக்கு வேலைதரும் சுடோகோ உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
நீண்ட காலம் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகிறார் என்றால், பிரபல ஸ்பா, சலூன் சேவையைப் பெறுவதற்கான கூப்பனை அளிக்கலாம். இது அவர்களை இன்னும் அதிக புத்துணர்வு அடையச் செய்யும்.
நீண்ட காலம் மருத்துவமனையில் இருக்கிறார், குடும்ப சூழல் சரியாக இல்லை என்றால், அவர்களுக்கு மளிகைப் பொருட்களை பரிசளிக்கலாம். லாண்டரி, டிரைக்ளீன் உள்ளிட்ட சேவைகளைப் பரிசளிக்கலாம்.
இவற்றுடன் அன்பான ஆறுதலான சொற்கள், அக்கறையான கவனிப்பு, தெம்பூட்டும் நம்பிக்கையே சிறந்த பரிசுகள்.