பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய எட்டயபுரம் ஆட்டுச்சந்தை; சுமார் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

தூத்துக்குடி:

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டத்தின் புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தை களைகட்டியது. சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தை, தென் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாகும். இங்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் சந்தைகளில் இருந்து ஆடுகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் வருகின்றனர்.

சந்தையில் ஒரு ஆடு 6 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகி வருகின்றன. நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இன்று சந்தை களைகட்டியுள்ளது. இதனிடையே நாளைய பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் ஏராளமானவர்கள் சந்தையில் குவிந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் சந்தையில் குவிந்த நிலையில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.