பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வு; 30,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்

இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்று(புதன்கிழமை) ஏற்றமான வர்த்தகம் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. அதன் முக்கியக் குறியீட்டெண் சென்செக்ஸ் 83.64 புள்ளிகள் உயர்ந்து 30,026.88-ல் வர்த்தகம் ஆகிறது.

தேசிய பங்குச் சந்தை நிஃப்டி குறியீட்டெண் 32 புள்ளிகள் அதிகரித்து 9,338-ல் வணிகமாகிறது.

ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இதில் அதிக ஆதாயம் பெறுகின்றன. வங்கி மற்றும் நிதிச் சேவை, எப்எம்சிஜி துறை பங்குகள் அதிக ஏற்றம் கண்டன.

என்ன காரணம்?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட இந்திய நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் சாதகமாக அமைந்துள்ளதும், பிரான்ஸ் நாட்டின் தேர்தல் முடிவுகளையொட்டி சர்வதேச சந்தைகளில் சாதகமான போக்கு இருப்பதாலும் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவியது என்று சந்தை நோக்கர்கள் குறிப்பிட்டனர்.

இந்த உயர்வால் ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் மதிப்பு 1% அளவிலும், விப்ரோவின் மதிப்பு 2% அளவுக்கும் அதிகரித்துள்ளன.

சந்தையின் இந்த ஏற்றமான போக்கு அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எடெல்வைஸ் செக்யூரிட்டீஸின் தலைவர் விகாம் ஹெமானி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply