பட்ஜெட்டில் பெண்களுக்குப் பங்கு இல்லையா?
பிப்ரவரி 29 அன்று அலுவலகத்தில் இருந்தபோது இல்லத்தரசியான ஒரு தோழி போன் செய்தார். ஒரு விசேஷத்துக்காக அழைப்பு விடுத்த அவரிடம், “என்னப்பா பட்ஜெட் உரை டிவில பார்த்தியா? என்ன சொல்றாங்க?” என்று கேட்டேன். “அதெல்லாம் நான் பார்க்க மாட்டேன். நமக்கு எதுக்குப்பா பட்ஜெட் எல்லாம்” என அவசரமாய் பதில் வந்தது. பட்ஜெட் நமது தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கும், அதை நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் நான் சொன்னது அவருக்கு மனதில் பதியவில்லை.
அலுவலகத் தோழிகளிடம் பேசிப்பார்த்தேன். “நமக்கு வருமான வரி வரம்பு உயர்த்துறாங்களானு பார்ப்போம்… என்ன பொருட்கள் எல்லாம் விலை ஏறுது அல்லது இறங்குது என்று பார்ப்போம்” என்றனர். இதைக் கடந்து வேறெந்த பதிலையும் வாட்ஸ் அப் தோழிகளிடம் இருந்தோ, சகோதரிகளிடமிருந்தோ பெற முடியவில்லை. அவ்வளவுதானா பெண்களுக்கும் பட்ஜெட்டுக்கும் உள்ள தொடர்பு?
பட்ஜெட்டின்அடிப்படை
நமக்கு குடும்ப பட்ஜெட் பற்றி நன்றாகவே தெரியும். ஒரு மாதத்துக்கு எவ்வளவு வருமானம் வரும் என்பதை அனுசரித்து, அந்த மாதச் செலவுகள் என்னென்ன, எவ்வளவு செலவிடலாம் என்பதை நாம் திட்டமிடுவது குடும்ப பட்ஜெட். அரசின் பட்ஜெட் அப்படிச் செய்வதல்ல. அரசு முதலில் என்னென்ன செலவு செய்யப் போகிறது என்பதை விவரிக்கும். பட்ஜெட் உரையை நாம் கவனித்தால், நிதியமைச்சர் முதலில் செலவினங்களைச் சொல்லி, அதற்கு எவ்வளவு கோடிகள் ஒதுக்கப்படுகின்றன என்று கூறுவார். அதற்குப் பின் அறிவிக்கப்பட்ட செலவினங்களுக்கான நிதியாதாரங்கள் எங்கிருந்து, எவ்வளவு திரட்டப்பட உள்ளன என்பதையும் கூறுவார். குடும்பப் பட்ஜெட்டுக்கும், நாட்டின் பட்ஜெட்டுக்கும் இதுதான் அடிப்படை வித்தியாசம். குடும்பத்தின் வருமானம் என்பது வரையறைக்கு உட்பட்டது. ஆனால், அரசு தனக்கான வருமானத்தை வேண்டிய அளவு உயர்த்திக்கொள்ளும் அதிகாரம் படைத்தது. உயர்த்திக் கொள்ள முடியாவிட்டால் கடன் வாங்கும். எனவே, நாட்டில் நிலவுகின்ற பல்வேறு பொருளாதார, சமூக நடவடிக்கைகளைச் சரி செய்யும் வல்லமை படைத்த அரசின் கைகளிருக்கும் அருமையான கருவியே பட்ஜெட்.
பட்ஜெட்டும் பெண்களும்
பெண்கள் மீது பட்ஜெட் ஏற்படுத் தும் தாக்கங்களை மூன்றாகப் பிரிக்கலாம். 1.பெண்களுக்கு என்று பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட திட்டங்கள், அறிவிக்கப்பட்டவை ஆகியன ஏற்படுத்தும் தாக்கம்.
2. பொதுவான அறிவிப்புகள் பெண்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம்.
3. பட்ஜெட் அறிவிப்புகளில், சமூகக் காரணிகளால் பெண்களுக்கு மட்டும் ஏற்படும் கூடுதல் தாக்கம்.
ஒட்டு மொத்த பட்ஜெட் செலவில் 4.5 சதவீதம்தான் பெண்களுக்கு என்று குறிப்பிட்டு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, பெண்கள் நலனுக்கு என்று அறிவிக்கப்படும் திட்டத் தொகை எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பதற்கு வெளிப்படையான அறிவிப்பு எதுவும் இல்லை. உதாரணமாக ‘நிர்பயா’ நிதிக்கு சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை இந்த ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புத் திட்டத்துக்காக, சாலைப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட 653 கோடிகள் என்னவாயிற்று என்பது தெரியவில்லை.
இந்த பட்ஜெட்டில் மிக முக்கியமாகச் சொல்லப்பட்டுள்ள அறிவிப்பு, ஏழைப் பெண்களுக்கு இலவசமாக காஸ் இணைப்பு வழங்கும் திட்டம். அதற்கு நிதி ஒதுக்கீடு 2,000 கோடி. ஏழைப் பெண்கள் விறகு அடுப்பில் சமையல் செய்வதால் புகை மாசுவினால் அவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. விறகு அடுப்பில் சமையல் செய்யும் ஏழைப் பெண்களால், காஸ் அடுப்பு வாங்க முடியுமா என்பது அடிப்படைக் கேள்வி. அதைத் தாண்டி, ஏழைப் பெண்களின் உடல் நலம் குறித்து இவ்வளவு அக்கறை இருக்கும் மத்திய அரசுக்கு, இந்தத் தேசத்தில் 51 சதவீத வீடுகளில் இன்னும் கழிப்பறை இல்லை எனும் உண்மை தெரியாதா? திறந்த வெளிக் கழிப்பிடங்களை ஒழிக்கும் திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என அறிவிப்பு மட்டும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், முறையான, நடைமுறை சாத்தியமான எந்தத் திட்டமும் இல்லை.
தூய்மை இந்தியா திட்டத்திற்கு 9,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கழிப்பறை இல்லாத வீடுகளில் அவற்றைக் கட்ட வேண்டும் எனில், 12 கோடி கழிப்பறைகள் கட்ட வேண்டும். அதற்கு ரூ. 2.5 லட்சம் கோடி தேவைப்படும். அதற்கு எந்த ஒதுக்கீடும் இல்லை. அவையெல்லாம் ‘நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு’ (கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிடி) என்ற வகையில், இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் சில அதை நிறைவேற்றும் என பிரதமர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். ‘ஸ்வச் பாரத்’ (தூய்மை பாரதம்) எனப் படாடோபமாக எழுப்பப்பட்ட முழக்கம் இவ்வாறாக நீர்த்துப்போனது. பட்ஜெட் இது குறித்து ஒன்றும் கண்டு கொள்ளவில்லை.
இன்னும் ஒரு படி மேலே போய் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான (ICDS) ஒதுக்கீடு 15,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் 2001-ம் ஆண்டு தீர்ப்புக்குப் பின்னரும் அது அமலாகவில்லை. இன்று அதற்கான ஒதுக்கீடு வெட்டப்பட்டிருப்பது துரதிருஷ்டமே.
பெரிய ஷாப்பிங் மால்கள் போன்று சிறிய கடைகளும் வாரத்தில் 7 நாட்களும் திறந்திருக்க அனுமதி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடைகளில் பெண்கள் அதிகமாக வேலையில் உள்ளனர். எந்த அடிப்படை வசதியுமின்றி, வரையறுக்கப்பட்ட வேலை நேரமுமின்றி நாள் முழுவதும் உழைக்கும் பெண்கள் ஞாயிறு ஒரு நாள்தான் ஓய்வெடுப்பார்கள். அதையும் பணி நேரமாகக் கணக்கில் கொண்டால், பெண்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.
பெண்கள் உழைப்பின் மதிப்பு
பெண்கள் மற்றும் முதியவர்கள் செய்யும் வீட்டு வேலைகளின் மதிப்பை (குழந்தைப் பராமரிப்பு, சமையல், சுத்தம் செய்வது போன்றவை) நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) கணக்கில் எடுக்க வேண்டும் என்பது, பல பெண்கள் அமைப்பினர் மற்றும் இடதுசாரி இயக்கத்தினரின் கோரிக்கை. உலகம் முழுவதிலும் இந்தக் கோரிக்கை வலுப்பெற்றுவருகிறது. அத்தகைய உழைப்பின் மதிப்பு கணக்கில் எடுக்கப்பட்டால், அது சுமார் 10 டிரில்லியன் (லட்சம் கோடி) டாலர் ஆக, அதாவது உலக ஜிடிபியில் 13 சதவீதமாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். பெண் உழைப்பு கண்ணுக்குத் தெரியாததாக, அளவிட முடியாததாக, அங்கீகரிக்க இயலாததாக இருக்கிறது என்பதே முகத்தில் அறையும் உண்மை.
இப்பொழுதுசொல்லுங்கள், பெண்களுக்கும் பட்ஜெட்டுக்கும் எவ்வளவு தொடர்பு உள்ளது!